நாளை மாலை 6 மணியுடன் பரப்புரை நிறைவு..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. 40 தொகுதிகள் கொண்ட தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் வரும் வெள்ளிக்கிழமை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், நாளை மாலை 6 மணிக்கு தேர்தல் பரப்புரை நிறைவடையும் என்று தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர்களுக்கு 92 சதவீதம் பூத் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளதாகவும், இன்று மாலையுடன் பூத் ஸ்லிப் வழங்கும் பணி நிறைவடையும் என்றும் கூறியுள்ளார்.
தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர்கள் தபால் வாக்கு செலுத்துவதற்கு இன்று கடைசி நாள் என்றும் சாஹூ தெரிவித்துள்ளார். வாக்குப்பதிவு அன்று விடுமுறை அளிக்காத தனியார் நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள அவர், விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து, ஊழியர்கள் புகார் அளிக்க பிரத்யேக எண்ணும் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், வரும் வியாழக்கிழமை மாலைக்குள் அனைத்து வாக்குப்பதிவு மையங்களுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணி நிறைவடையும் என்று சத்ய பிரதா சாஹூ கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




