மோடி தமிழ்நாட்டில் தங்கினாலும் ஒரு சீட் கூட கிடைக்காது – உதயநிதி ஸ்டாலின்
சேலம் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.
அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி, காங்கிரஸ், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் , இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி தமிழக வாழ்வுரிமைக் கட்சி, உள்ளிட்ட பல்வேறு கட்சியினருடன் கூட்டணி அமைத்துள்ளோம் என்றார்.
பொதுமக்கள் திமுகவுக்கு அளிக்கும் ஓட்டு மோடிக்கு வைக்கும் வேட்டு என்று கூறிய உதயநிதி ஸ்டாலின், கொரோனா காலத்தில் மோடி வந்து ஆறுதல் கூறவில்லை என்றும், 500,ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததையும் நினைவு கூர்ந்தார்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு தரப்படும், அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என்றும் கூறினார். மகளிருக்கு இலவச பேருந்து பயணத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்ட உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தமிழ்நாட்டிலேயே வந்து தங்கி இருந்தாலும் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியாது என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
தமிழ்நாட்டு, மக்கள் சுயமரியாதையுடன் இருப்பார்கள்.
எங்களை மதிக்கவில்லை என்றால் தூக்கி போட்டு மிதிப்போம் என்றும் உதயநிதி பேசினார்.
ஜிஎஸ்டியாக நாம் கட்டும் வரி பணத்துக்கு 29 பைசா மட்டுமே திரும்பத் தரப்படுகிறது என்றும், உத்தரபிரதேசத்துக்கு 3 ரூபாயும், பிகாருக்கு 7 ரூபாயும் தரப்படுவதாக உதயநிதி குற்றம்சாட்டினார். தமிழ் வளர்ச்சிக்கு ஒரு பைசா கூட ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை என்றும் மாறாக இந்தி வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கினர் என்றும் உதயநிதி சாடினார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரவில்லை என்று குறிப்பிட்ட உதயநிதி, ஒரே ஒரு செங்கல் மட்டும் நட்டார்கள் . இப்போது கல்லை காணவில்லை என தேடி வருகிறார்கள் என்றார். எய்ம்ஸ் மருத்துவமனை வந்தால்தான் செங்கல்லை தருவேன் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




