--- --:--:-- --

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 2ம் இடம் பிடித்த வீரர் அமைச்சர் மீது பகீர் புகார்..!

10

விறுவிறுப்பாக நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் பாகுபாடு இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அனைவரின் கண்காணிப்பில் வெளிப்படை தன்மையுடன் தான் போட்டி நடைபெற்றதாக, அமைச்சர் மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

 

உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் இறுதிச் சுற்று, இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. 10 சுற்றுகளாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியின் 9வது சுற்றின் முடிவில் 710 காளைகள் அவிழ்த்து விடப்பட்டிருந்தன. அப்போது மதுரை கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் பூவந்தியைச் சேர்ந்த அபிசித்தர் ஆகியோர் தலார் 11 காளைகளை அடக்கி சம நிலையில் இருந்தனர்.

 

இதையடுத்து தொடங்கிய இறுதிச் சுற்றில், கார்த்திக் காளைகளை பிடித்த நிலையில், அபிசித்தர் அடுத்தடுத்து 2 காளைகளை பிடித்து, கார்த்திக்கு கடும் போட்டி கொடுத்தார்.

 

கார்த்திக்கும், அபிசித்தரும் அடுத்தடுத்து ஆளுக்கொரு காளையை பிடித்து இருவரும் 14 காளைகள் என சமநிலையில் நீடித்தபோது, கார்த்திக் 15வது காளையை பிடித்தபோது அரங்கமே கரவொலியில் அதிர்ந்தது.

 

கார்த்திக் 16வது காளையை பிடித்த சிறிது நேரத்தில், அபிசித்தரும் மற்றொரு காளையை பிடித்தார். இதையடுத்து, யார் முதலிடம் பிடிப்பார்கள் என அரங்கமே காத்திருந்த நேரத்தில், மீண்டும் இருவரும் ஆளுக்கொரு காளைகளை பிடித்தனர்.

 

இறுதிச் சுற்றுக்கான கடைசி 5 நிமிடத்தில் அவிழ்க்கப்பட்ட மூன்றில் ஒரு காளையை கார்த்திக் பிடித்தார். இறுதியில் 18 காளைகளை அடக்கிய கருப்பாயூரணி கார்த்திக் முதலிடம் பிடித்தார். இவர் கடந்த 2022ஆம் ஆண்டில் இதே அலங்காநல்லூரில் முதலிடம் பிடித்த நிலையில், தற்போது 2வது முறையாக முதல் பரிசை தட்டிச் சென்றார்.

 

அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் கார் பரிசளிக்கப்பட்ட நிலையில், 17 காளைகளை பிடித்த அபிசித்தர் இரண்டாவது இடத்தை பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. இவர், இதே அலங்காநல்லூரில் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பிடித்தவர். அவருக்கு இரண்டாவது பரிசை கொடுப்பதற்காக அழைத்தபோது, அவர் பரிசு பெற வராமல், போட்டியில் விதிமீறல் நடைபெற்றதாக குற்றஞ்சாட்டினார்.

 

மேலும், போட்டியில் நடைபெற்ற சூழ்ச்சி குறித்து வீடியோ ஆதாரத்துடன் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் மூர்த்தி, விதிகளின் படியே போட்டி நடைபெற்றதாகவும், முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும் தெரிவித்தார்.

 

இதையடுத்து, போட்டியை கண்காணித்த வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, களத்தில் நின்று கொண்டிருந்த சில மாடுகளால், காளைகளை அவிழ்ப்பதில் சுணக்கம் ஏற்பட்டதாகவும், அதன் காரணமாகவே, இறுதிச் சுற்று தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் தெரிவித்தனர். மேலும், போட்டியாளர்கள் எவ்வளவு மாடுகளை பிடித்தார்கள் என்பதெல்லாம் அமைச்சருக்கு அப்போது தெரியாது என்றும் கூறினர்.

Right Menu Icon