--- --:--:-- --

ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தில் ரூ.70 லட்சம் இழந்து குடும்பத்தை பிரிந்த நபர்..!

2

பெங்களூரைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் ஒருவர் ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு அடிமையாகி சுமார் 70 லட்ச ரூபாய் பணத்தை இழந்துள்ளார். இதனால் அவருடைய குடும்பத்தினர் அவரை விட்டு விலகியுள்ளனர். பிறகு ஏழு மாத கவுன்சிலிங்கிற்கு பிறகு மீண்டும் தன்னுடைய குடும்பத்தாருடன் அவர் ஒன்று சேர்ந்துள்ளார்.

 

ராணி ஷெட்டி எனும் பெயர் கொண்ட மகளிர் உதவி எண் அதிகாரி, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில் கூறுகையில், “கடந்த அக்டோபர் மாதம் ஒரு பெண்மணியின் கணவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 70 லட்ச ரூபாய் இழந்ததை கண்டறிந்து மிகப்பெரும் அதிர்ச்சிகுள்ளகியுள்ளார். அவரால் தாங்கிக் கொள்ளவே முடியாத அளவிற்கு இந்த இழப்பு அவரை பாதித்துள்ளது.

 

உடனடியாக தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தன் அம்மா வீட்டிற்கு அவர் சென்று விட்டார். மேலும் இந்த விஷயத்தை சட்டரீதியாக அணுக விரும்பிய அப்பெண்மணி கே.ஆர். புரம் காவல் நிலையத்திற்கு சென்று அங்கு தன்னுடைய கணவரின் மேல் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி மிகப்பெரும் அளவில் பணத்தை இழந்ததாக புகார் செய்துள்ளார்.

 

அவரது கணவருக்கு உள்ளூர் கிரிக்கெட் விளையாட்டுகளின் போது இந்த பெட்டிங் பழக்கம் அறிமுகம் ஆகி உள்ளது. ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்த இப்பழக்கம் சில மாதங்கள் கழித்து அவரை அடிமையாக்கும் அளவிற்கு சென்று விட்டது. இந்த சமயத்தில்தான் அவருக்கு பெங்களூருவில் உள்ள ஐடி கம்பெனியில் மென்பொருள் பணியாளராக வேலை கிடைத்துள்ளது. 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட அந்நபருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

 

கடந்த 2022 ஆம் ஆண்டு தான் அவரின் மனைவி, தன்னுடைய கணவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாக இருப்பதை தற்செயலாக கண்டறிந்துள்ளார். மகளிர் உதவி எண் அதிகாரிகள் எவ்வளவு முயற்சி செய்தும் அந்நபரிடம் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை. மேலும் தன்னுடைய கணவரின் இந்த சூதாட்டம் அடிமைப் பழக்கத்தினால் தங்களுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதாரம் நெருக்கடிகளை பற்றியும் தானும் தன்னுடைய குழந்தைகளும் எவ்வாறு உணர்வு ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்பதை பற்றியும் விளக்கியுள்ளார்.

 

இந்த சமயத்தில் தான் உள்ளூர் காவல் நிலைய அதிகாரிகள் அப்பெண்மணியின் கணவரை அழைத்து விசாரித்துள்ளனர். “அதன் பிறகு சில மாதங்கள் கவுன்சிலங்கிற்கு பிறகு அவரது கணவரிடம் நல்லவிதமான மாற்றங்கள் ஏற்பட துவங்கியுள்ளது. ஆன்லைன் சூதாட்ட அடிமைப் பழக்கத்திலிருந்து முழுவதுமாக வெளிவந்துள்ள அவர் தற்போது அலுவலகத்திற்கு எப்போதும் போல செல்கிறார். இதனால் மகிழ்ச்சியுற்ற அவரது மனைவியும் தற்போது அவரது கணவருடன் சேர்ந்து வாழ்கிறார்” என்று ஷெட்டி விவரித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon