பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும்… அரசுக்கு ராமதாஸ் கோரிக்கை…!
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் ஏற்கெனவே அறிவித்தவாறு ஜுன் 1ஆம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நேற்று அறிவித்தார்.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்நாட்டில் அண்மைக்காலங்களில் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. வெப்பம் தணியும் வரை பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சியும், தமிழக அரசின் வருவாய்த்துறையும் அறிவித்துள்ளன. அத்துறைகளின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடக்கும்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
தமிழ்நாட்டின் பல பகுதிகளில் 42 டிகிரி செல்சியசுக்கும் மேல் வெப்பம் வாட்டி வரும் நிலையில், பெரியவர்களே வெளியில் செல்ல வேண்டாம் என அரசு அறிவுறுத்தும் சூழலில், அரசுப் பள்ளிகளை ஜுன் 1ஆம் தேதி திறப்பது எந்த வகையில் நியாயம்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கோடை வெப்பத்தின் கடுமை தணியும் வரை ஒரு வாரத்திற்கோ, 10 நாட்களுக்கோ அரசுப் பள்ளிகள் திறப்பை ஒத்தி வைப்பதால், யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. கல்வியைவிட மாணவர்களின் உடல்நலன் மிகவும் முதன்மையானது. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளிகள் திறப்பை குறைந்தது ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.





