சித்திரைத் திருவிழா கோலாகலம்..! 18ம்படி கருப்பர் கோவிலில் பக்தர்கள் தரிசனம்.. ரத்தம் குடித்து அருள்வாக்கு சொன்ன பூசாரி..!!
பிரசித்திபெற்ற கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பர் கோவில் 13- ஆம் ஆண்டு சித்திரைத் திருவிழா, கடந்த ஞாயிற்றுக் கிழமை வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், முள் செருப்பு அணிந்து நடந்து வந்த கோவில் பூசாரி, அரிவாள் மீது அமர்ந்தபடி அருள்வாக்கு சொன்னது, பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
திருவாடானை அருகே கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் கோவில். மிகவும் சக்தி வாய்ந்தவர், பல ஆயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாக அருள்பாலித்து வருகிறார். மதுரை அழகர்மலையில் இருக்கும் 18ம்படி கருப்பர் கோவிலில் இருந்து பிடிமண் எடுத்து, இக்கோவில் கட்டப்பட்டது என்பது இங்குள்ள சிறப்பம்சம் ஆகும்.
கோவிலில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடந்தாண்டு செப்டம்பர் 8ம் தேதி, ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, ஆண்டு திருவிழா நடத்துவது வழக்கம். வருடந்தோறும் நடக்கும் ஆண்டுத் திருவிழாவானது அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்கு பிறகு, காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கி 8 நாட்கள் மண்டகப்படியுடன் கோலாகலமாக நடைபெறும்.
இந்த நிலையில், ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் கோவில் ஆண்டு விழா மற்றும் சித்திரைத் திருவிழா, கடந்த மே 7ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காப்பு கட்டும் நிகழ்வுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரைத் திருவிழா, மே 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.
அன்றைய தினம் கோவிலில் உள்ள ஸ்ரீ கருப்பர், மாங்கல்ய காளி, இருளாயி அம்மன், ராக்கச்சி அம்மன், சிகப்பி அம்மன், பாப்பாத்தி அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார ஆராதனைகள் நடைபெற்றன. முன்னதாக ஸ்ரீ செல்வகணபதி, ஸ்ரீ ஆலடி கருப்பர்சாமி கோவிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு, சுவாமி புறப்பாடு நடைபெற்றது. அங்கிருந்து கரகம் எடுத்து வருகையில் ஏராளமான பக்தர்கள், சந்தனக்கூடு, பால்குடம் எடுத்து ஊர்வலமாக திருவீதியுலா சென்றனர்.

அன்று மாலை 3:00 மணியளவில் சேவல்கள், கிடாக்கள் பலி கொடுக்கப்பட்டன. 6 கிடா, சேவல் வெட்டப்பட்டு அதிலிருந்து வெளியேறிய ரத்தத்தை கருப்பசாமி ஆக்ரோஷமாகக் குடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்த்த பக்தர்கள் பரவசம் அடைந்தனர். அதன் தொடர்ச்சியாக, பூசாரி அரியமுத்து, ஸ்ரீ பதினெட்டாம்படி கருப்பசாமி வேடமிட்டு காலில் முள்செருப்பு அணிந்து வந்து சாமியாடினார்.
அரிவாள் மீது அமர்ந்து அவர் குறி சொல்ல, பக்தர்கள் பயபக்தியுடன் அருள்வாக்கு கேட்டுச் சென்றனர். பெண்கள் பலரும் தங்களது கோரிக்கைகள், வேண்டுதல்கள், பிரச்சனைகளை பூசாரியிடம் மனமுருகித் தெரிவித்து, அருள்வாக்கு பெற்று தெளிவு பெற்றது கண்கொள்ளாக்காட்சியாக இருந்தது. தங்களது குழப்பங்களுக்கு பூசாரி வடிவில் வந்து கருப்பரே தெளிவை தந்து அருள்வாக்கு அளித்துள்ளதாக, பக்தர்கள் பூரிப்புடன் தெரிவித்தனர்.
கோலாகலமாக நடைபெற்ற ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் கோவில் சித்திரை விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பங்குதாரர்கள், மண்டகப்படி கட்டளைதாரர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். இந்த விழாவில் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் திரளாகப் பங்கேற்று கருப்பரின் அருளாசியைப் பெற்றனர்.

தீய சக்திகளை விரட்டும்
கருப்பர் காலடி எலுமிச்சை!
கீழக்கோட்டையில் வீற்றிருக்கும் ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இவர், மக்களை காக்கும் காவல் தெய்வமாவார். மக்கள் இந்த கருப்பசாமி மேல் மிகுந்த பக்தி கொண்டு மிகவும் பயபக்தியுடன் வணங்கி வருகின்றனர். அநியாயங்கள் செய்தால் கருப்பசாமி கேட்பார் என பக்தர்கள் நம்புகின்றனர். இவரைக் கருப்புசாமி என்றும், கருப்பன், பதினெட்டாம்படியான் என்றும் அழைப்பதுண்டு.
பல ஆயிரம் குடும்பங்களுக்கு குல தெய்வமாகத் திகழும் ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர், இக்கோவிலில் நின்ற கோலத்தில் காட்சி அளிக்கிறார். தலையில் பெரிய தலைப்பாகை (உருமால்) உள்ள கருப்பரின் நெற்றி; மிரட்டும் அவரது கூறிய பார்வை, முறுக்கிய மீசை, கம்பீரமாக உள்ளது. கருப்பரின் வலது கையானது வீச்சரிவாளுடன் ஓங்கியவாறு வீரத்தை பறைசாற்றுகிறது. மறு கையில் கதாயுதம் மண்ணை தொட்டபடி உள்ளது. முழங்காலுக்கும் கீழே வருமளவில் இடுப்பில் கச்சை ஆகியவற்றோடு கருப்பசாமி வீற்றிருக்கிறார்.
இக்கோவிலில் இன்னொரு சிறப்பம்சம், கருப்பரின் காலடியில் வைத்து பூஜை செய்த எலுமிச்சை பழம் மகத்துவம் பெற்றிருப்பது தான். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீகருப்பருப்பருக்கு சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்று வருகிறது. அந்த நாட்களில் கருப்பரின் காலடியில் பக்தர்கள் எலுமிச்சை பழத்தை வைத்து பூஜித்து வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம். இதன் மூலம் பில்லி சூனியம், செய்வினை போன்ற தீய சக்திகள் நம்மையும் நமது வீட்டையும் அண்டாது என்ற நம்பிக்கை, பக்தர்களிடம் உள்ளது.
எனவே, கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பசாமி கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் பங்கேற்று அருளாசி பெறவும், கோவிலுக்கு காணிக்கைகளை தாராளமாக வழங்கவும் கோவில் நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




