--- --:--:-- --

அவிநாசி கோவிலில் திருட்டு! சிசிடிவி, செக்யூரிட்டி இருந்தும் கொள்ளை நடந்தது எப்படி? நள்ளிரவில் நடந்த பகீர் சம்பவம் குறித்த பரபரப்பு தகவல்கள்!!

zdgdsg

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில். கொங்கேழு சிவாலயங்களில் ஒன்றான இத்தலம், புராண காலங்களில் திருப்புக் கொளியூர் என்ற பெயரும் உண்டு. சுந்தரர், முதலையுண்ட மதலையை மீட்டதாகக் கருதப்படும் திருக்குளமும் இங்குள்ளது. நகரில் மத்தியில் பிரம்மாண்டமாக அமைந்துள்ள இக்கோவிலில், அண்மையில்தான் சித்திரைத் திருத்தேர் விழா, வெகு விமரிசையாக நடைபெற்று முடிந்தது.

இந்த நிலையில், நேற்றிரவு (23.05.2023) பூஜை முடித்துவிட்டு, கோவில் நடையை பூட்டிவிட்டு அர்ச்சகர்கள் சென்றனர். இன்று இன்று காலை வழக்கம் போல் நடையை திறக்க வந்துள்ளனர். அப்போது கோவிலில் பொருட்கள் கலைந்து அங்கிமிங்குமாக சிதறிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் திருடு போயிருப்பது கண்டு அர்ச்சகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அவிநாசிலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் பிரதான கருவறையில் லிங்கத்தின் மேல் உள்ள மிகவும் கனமான தாராபாத்திரத்தை (அதாவது லிங்கத்தின் மேல் அபிஷேக திரவியம் படும் வகையில் இருக்கும் அமைப்பு) திருட முயற்சி நடந்துள்ளது. எனினும் அதை கழற்ற முடியாத நிலையில், அடுத்ததாக, பிரதான கருவறையைச் சுற்றியுள்ள 63 நாயன்மார்களின் உடை வஸ்திரங்கள், சிறு கலசங்களை உடைத்து திருடவும் மர்ம நபர்கள் முயன்றுள்ளனர்.

 

அதேபோல் கோவில் உண்டியலையும் திருடர்கள் அசைத்துப் பார்த்துள்ளனர். எனினும் அதிலிருந்து எதையும் எடுக்கமுடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் சுப்ரமணியர் சன்னதியில் வேல், சேவல் கொடி ஆகியனவும் களவாடப்பட்டுள்ளன. இதுதவிர மேலும் என்னென்ன பொருட்கள் திருடு போயுள்ளன என்பது, முழுமையான விசாரணைக்கு பிறகே தெரியவரும். தகவலறிந்து அவிநாசி போலீசார் கோவிலில் விசாரணை நடத்தி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர்.

அவிநாசி நகரின் மத்தியில் அமைந்துள்ள பிரபலமான கோவிலில் திருட்டு சம்பவம் நடந்திருப்பது பக்தர்களை அதிர்ச்சியும் கவலையையும் அடையச் செய்துள்ளது. இவ்வளவு பெரிய கோவிலில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லையா? சித்திரைத் திருவிழா நடந்து முடிந்துள்ள நிலையில் உரிய வகையில் கண்காணிப்பு செய்யப்படவில்லையா? கோவில் மதில் சுவரைச் சுற்றியுள்ள மின் விளக்குகள் பல சரியாக எரியவில்லை என்று கூறியும் சரி செய்யப்படாதது ஏன்? கோவிலுக்குள் இருந்து சிலரின் ஒத்துழைப்போடு இச்சம்பவம் நடந்திருக்குமா? அருகாமையில் உள்ள பூங்கா, கோவிலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதா என்பது போன்ற பல்வேறு கேள்விகளை இச்சம்பவம் ஏற்படுத்தி இருக்கிறது.

 

சிவன் சொத்து குல நாசம் என்பார்கள். அரிய பொருளான அவிநாசியப்பர் கோவிலில் கைவத்த கயவர்களையும், உடந்தையாக இருப்பவர்களையும் நிச்சயம் சிவபெருமான் தண்டிப்பார் என்கின்றனர் பக்தர்கள்.

Right Menu Icon