--- --:--:-- --

திக்..திக்.. திருப்பூர்? காவல் ஆணையருக்கு சவால்கள் நிறைந்த போர்க்களம்! சட்டம் ஒழுங்கு, குற்றங்களுக்கு போடப்படுமா கடிவாளம்?

police ig

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக எஸ்.பிரபாகரன் பொறுப்பேற்றுள்ள நிலையில், நகரின் சட்டம் ஒழுங்கை காப்பதுடன், அதிகரித்துள்ள குற்றச்செயல்களை தடுப்பது உள்ளிட்ட சவால்களை, அவர் எப்படி எதிர்கொள்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்து வந்த பாபு மருத்துவ விடுப்பில் சென்றார். இதையடுத்து, அவருக்கு பதில், கோவை சரக டி.ஐ.ஜி முத்துசாமி, கூடுதலாக திருப்பூர் மாநகரத்தை கவனித்து வந்தார். இந்த நிலையில், திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திடீரென கடந்த 1ம் தேதி திடீரென மாற்றப்பட்டார். அந்த பதவிக்கு பிரபாகரனை நியமித்து, தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பனீந்திர ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

 

புதிய ஆணையர் பிரபாகரன், இதற்கு முன்பு டிஐஜி பதவியில் சென்னை மாநகார காவல் துறையில் கிழக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக இருந்தவர். தற்போது, ஐ.ஜி. ஆக பதவி உயர்த்தப்பட்டு திருப்பூர் மாநகர காவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

 

புதிய காவல் ஆணையர் பிரபாகரன், திருப்பூருக்கு ஏற்கனவே பரிச்சையமானவர்தான். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், திருப்பூர் மாநகர துணை ஆணையராக பணியாற்றி இருக்கிறார். எனவே, திருப்பூரில் தற்போதைய பிரச்சனைகள் அவரால் எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.

 

இந்த நிலையில், புதிய காவல் ஆணையர் எஸ்.பிரபாகரனை, “குற்றம் குற்றமே” வார இதழ் தரப்பில் ஆசிரியர் குழு நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தது. அத்துடன், திருப்பூர் நகரின் முக்கியப் பிரச்சனைகளையும், காவல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

 

வந்தாரை வாழ வைக்கும் பின்னலாடை நகரான திருப்பூரில் பல லட்சம் வெளியூர், வெளி மாநிலத் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். இது திருப்பூருக்கு சாதகமான அம்சம்; அதே நேரம், வெளி நகரங்கள், மாநிலங்களில் குற்றங்களை புரிந்து, இங்கு தொழிலாளர் என்ற போர்வையில் சில குற்றவாளிகளும் தங்குவது, பாதமாக அம்சம்.

எனவே, வெளிமாநிலத் தொழிலாளர்களை பணிக்கு அமர்த்துவதில் பனியன் நிறுவனங்களும் தொழில்துறையும், கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்து, தொழில்துறையினர் பணியமர்த்துகின்றனரா என்பதை போலீசார் கண்காணிக்க வேண்டும்.

 

அதேபோல், கஞ்சா உள்ளிட்டவற்ற போதை வஸ்துக்களின் புழக்கம் திருப்பூரில் அதிகளவில் உள்ளது. ஒருசில அரசு பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா புழக்கம் சர்வசாதாரணமாக நடப்பதாக வரும் தகவல்கள் கவலை அளிக்கின்றன. இதையும் புதிய காவல் ஆணையர் பிரபாகரன் கவனத்திற்கு’ “குற்றம் குற்றமே” வார இதழ் தரப்பில் கொண்டு வரப்பட்டது.

கஞ்சா, மது பயன்பாடு அதிகரிப்பால் திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள புறநகர் பகுதிகளில், வழிப்பறி, செயின் பறிப்பு, வீடுகளில் திருட்டு உள்ளிட்டவை அதிகரித்துள்ளன. இதற்கு முக்கியத்துவம் தந்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும். அதேபோல், போதிய போலீசார் இல்லாதது, குற்ற நிகழ்வுகளை தடுக்க முடியாமல் போவதற்கு முக்கிய காரணமாகும். குற்றங்கள் நடப்பதை தடுக்க, காவல் துறை ஆணையர் முன்னுரிமை தர வேண்டும்.

 

புதியதாக பொறுப்பேற்ற காவல் ஆணையர் நமது “குற்றம் குற்றமே” வார இதழ் தரப்பில் கூறுகையில், “திருப்பூர் நகரின் பிரச்சனைகளை நன்கு அறிவேன். ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தி, படிப்படியாக பிரச்சனை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது வினாயகர் சதுர்த்தி நெருங்கி வருகிறது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு முன்னுரிமை தந்து விழாவை சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டியுள்ளது” என்றார்.

 

காவல் துறை ஆணையர் ஒவ்வொருவரும் பொறுப்பேற்கும் போது பல வாக்குறுதிகளை அளிப்பதும், பின்னர் அவற்றில் சிலவற்றை நிறைவேற்றுவதற்குள்ளாக பணியிட மாற்றம் செய்வதுமான போக்கு உள்ளது. அதுபோல், புதிய காவல் ஆணையர் பிரபாகரன் காலத்தில் நடைபெறாது என்று நம்புவோம். அவரது பணி சிறக்க வாழ்த்துவோம்!!

 

உறங்குகிறதா உளவுத்துறை?

 

திருப்பூர் மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற பிரபாகரன், தனது முதல் நிகழ்வாக, விகாஸ் வித்யாலயா பள்ளிக்கு எதிரே உள்ள சர்ச்சைக்குரிய 8.3 ஏக்கர் நிலத்தில் நடைபெறவிருந்த மரக்கன்று நிகழ்வில் பங்கேற்பதாக இருந்தது. இது தொடர்பான அழைப்பிதழும் அடிக்கப்பட்டது.

ஆனால், அந்த இடம் பிரச்சனைக்குரிய இடம் என்ற தகவல், கடைசி நேரத்தில் காவல் ஆணையருக்கு  முக்கிய பிரமுகர் ஒரு வாயிலாக தெரியப்படுத்திய பிறகு, அந்த நிகழ்வில் பங்கேற்பதை அவர் தவிர்த்துவிட்டார். இந்த விஷயத்தில், திருப்பூர் உளவுத்துறை கோட்டை விட்டது எப்படி என்று தெரியவில்லை. உளவுத்துறை ஏ.சி. ராதாகிருஷ்ணன் சறுக்கியது எப்படி என்பது ஆச்சரியமாக உள்ளது.

 

காவல் ஆணையர் பங்கேற்கும் முதல் கூட்டம் பிரச்சனைக்குரிய இடம் என்பது, இங்குள்ள உளவுத்துறை போலீசாருக்கு தெரியாதா? அல்லது ஆணையர் கவனத்திற்கு வேண்டுமென்றே கொண்டு செல்லவில்லையா என்ற கேள்வி எழுகிறது. எனவே, திருப்பூர் மாநகர காவல் ஆணையர் பிரபாகரன், மெத்தனப்போக்குடன் ஆமை வேகத்தில் செயல்படும் உளவுத்துறை காவல் பிரிவை சீரமைக்க வேண்டியது அவசியம் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.


அடிக்கடி மாற்றம் நல்லதா?

தமிழகத்தில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு, கடந்த 15 மாதங்களில், மூன்று முறை திருப்பூர் காவல் ஆணையர்கள் மாற்றப்பட்டுள்ளனர். ஆட்சிக்கு வந்ததுமே, அப்போது காவல் ஆணையராக இருந்த கார்த்திகேயன் மாற்றப்பட்டு, கடந்தாண்டு ஜூன் மாதத்தில் வனிதா, நியமிக்கப்பட்டார்.

 

வனிதா கடந்த ஜனவரி மாதம் மாற்றப்பட்டு, அவருக்கு பதிலாக, தற்போது ஆணையராக இருந்து வந்த பாபு நியமிக்கப்பட்டார். ஆனால், அவரும் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார். அரசியல் நெருக்கடிகளுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தான் அவர், விடுப்பில் சென்றதாக ஒரு பேச்சு உலவுகிறது.

 

இந்நிலையில் பிரபாகரன், காவல் ஆணையராக பொறுப்பேற்றுள்ளார். இவரும் ஓராண்டுக்குள் ஓய்வு பெற இருக்கிறார். அடிக்கடி இப்படி காவல் ஆணையரை மாற்றுவது போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு நடைமுறை சிக்கலை உண்டாக்குகிறது.

 

புதிய அதிகாரிகள் பொறுப்பேற்று திட்டங்களை செயல்படுத்துவதற்குள்ளாக, அவர்கள் மாற்றப்படுவது மிகவும் கவலை அளிக்கக்கூடியது. இது டாலர் சிட்டியான திருப்பூரின் வளர்ச்சியை மிகவும் பாதிக்கும். அதேபோல், ஓய்வு பெறக்கூடிய நிலையில் உள்ளவர்களுக்கு பதிலாக இளமையும் துடிப்பும் துணிச்சல்மிக்க அதிகாரிகளை இங்கு உயர் பொறுப்புகளில் நியமிக்க வேண்டும் என்பது, சமூக ஆர்வலர்களின் கருத்தாகும்.


Right Menu Icon