போதையில்‘காக்கிகள்’ ஆட்டம்?! சேலத்தில் பாஜக வழக்கறிஞர் ராமச்சந்திரனிடம் அராஜகம்.. வாரண்ட் இல்லாமல் இரவில் கைது செய்ய வந்ததால் சர்ச்சை!
சேலத்தில் பாஜக வழக்கறிஞரும், ஊடகவியலாளருமான ராமச்சந்திரனை, வாரண்ட் இல்லாமல் மதுபோதையில் இருந்த போலீசார் கைது செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பையும், காவல்துறைக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் மரவனேரி பிள்ளையார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், வழக்கறிஞர். இவர், பாஜக அறிவுசார் பிரிவின் சேலம் மாவட்ட செயலாளராகவும் உள்ளார். அத்துடன், பாரத இந்து பரிவார் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகிறார். வழக்கறிஞர் தொழில், அரசியல் பணிகளுக்கு மத்தியில் ஊடகவியலாளராகவும் திகழ்கிறார். முக்கிய வழக்குகள் உள்ளிட்ட தகவல்களை ஊடகங்களில் பகிர்ந்து எழுதி வருகிறார்.
இந்த நிலையில்கடந்த 29ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8:45 மணியளவில், ராமச்சந்திரன் தனது அலுவலகத்தில் இருந்துள்ளார். அப்போது, சென்னை பதிவெண் கொண்ட காரில் மூன்று பேர் வந்துள்ளனர். அவர்கள், ராமச்சந்திரனின் அலுவலகத்தில் அனுமதியின்றி அத்துமீறி நுழைந்துள்ளனர்.
யார் நீங்கள், எதற்காக வந்துள்ளீர்கள் என்று கேட்பதற்குள், “உங்களை கைது செய்ய வந்துள்ளோம்” என்று கூறியுள்ளனர். இதை கேட்டு ஆச்சரியமடைந்த வழக்கறிஞர் ராமச்சந்திரன், “நான் ஒரு வழக்கறிஞர். அதுமட்டுமின்றி, கைது செய்ய வேண்டும் என்றால் முன் அனுமதி பெற வேண்டும். என்னை கைது செய்வதற்கான வாரண்ட் உள்ளதா” என்று, அவர்களிடம் கேட்டுள்ளார்.
ஆனால், போதையில் இருந்த போலீசாரோ, தாங்கள் சென்னையில் இருந்து வந்துள்ளதாகவும், கைது வாரண்ட் எதுவும் இல்லை. பேசாமல் வாகனத்தில் ஏறும்படியும் ராமச்சந்திரனை பிடித்து இழுத்துள்ளனர். இதற்கு ராமச்சந்திரன் ஒப்புக்கொள்ளவில்லை. தரதரவென்று இழுத்துள்ளனர். இதில், ராமச்சந்திரனின் சட்டை பட்டன், அவர் அணிந்திருந்த செயின் உள்ளிட்டவை அறுந்தன. அவரது செல்போன் கீழே விழுந்து பழுதானது.
போலீசாரின் அத்துமீறலுக்கு உடன்படாத ராமச்சந்திரன், அவர்களின் செயலுக்கு எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் அவருக்கும், சென்னையில் இருந்து வந்த 3 போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இரவு நேரத்தில் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சத்தம் கேட்டு, அப்பகுதியில் மக்கள் கூடினர்.
இதனிடையே, இச்சம்பவம் குறித்து உள்ளூர் போலீசாருக்கு ராமச்சந்திரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அஸ்தம் பட்டி போலீசார், அங்கு என்ன நடந்தது என்பதை விசாரித்தனர். இதில், காரில் வந்தவர்கள் சென்னை வேளச்சேரி போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த அருண் மற்றும் வினோத் என்பதும், எந்த ஒரு ஆவணமும், வாரண்ட்டும் இல்லாமல், ராமச்சந்திரனை கைது செய்ய வந்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து, சேலம் போலீசார் சென்னை போலீசாருடன் சுமார் ஒரு மணி நேரம் பேச்சு நடத்தினர். இதன் முடிவில், சென்னை வேளச்சேரி போலீசார் வெறும் கையுடன் சென்னைக்கு மீண்டும் புறப்பட்டு சென்றனர். போதையில் வந்து, இரவில் சேலம் வழக்கறிஞரிடம் போலீசார் அத்துமீறி நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம், சேலத்தில் உள்ள இந்து அமைப்புகள் மற்றும் பாஜகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
என்ன நடந்தது? விவரிக்கிறார் ராமச்சந்திரன்!
இந்த விவகாரம் குறித்து, “குற்றம் குற்றமே” தரப்பில், வழக்கறிஞர் ராமச்சந்திரனிடம் பேசினோம்.
அவர் கூறியதாவது: கடந்த 29ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 8:45 மணியளவில், 3 போலீசார் மாடிக்கு வந்தனர். என்ன விஷயம் என்று கேட்டேன். தாங்கள் போலீஸ்காரர்கள் என்றும், என்னை அவர்களுடன் வர வேண்டுமென்றும் சொன்னார்கள். அவர்களில் ஒருவர் மது போதையில் இருந்ததால், போலீசாரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இதனிடையே, என்னை வலுக்கட்டாயமாக இழுத்தனர்.
இதில் என் செல்போன் கீழே விழுந்தது; செயின் அறுந்தது. வாரண்ட் இருக்கிறதா? சம்மன் உள்ளதா? நான் ஒரு வழக்கறிஞர். உள்ளூர் போலீசில் தகவல் சொல்லி இருக்கிறீர்களா என்று கேட்டேன். அவர்கள் எதற்குமே பதிலளிக்காமல், தங்களுடன் வரவேண்டுமென்று பிடிவாதமாக சொன்னார்கள்.

இதனிடையே, சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் சிலர், நாங்கள் இருக்குமிடத்திற்கு வந்துவிட்டனர். இதனிடையே, சேலம் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தி, அவர்களும் வந்தனர். சென்னை போலீசார் என்று சொல்லிக் கொண்டு, போதையில் என்னிடம் அத்துமீறி நடந்து கொண்டனர். ஒரு வழக்கறிஞரான எனக்கே இந்த நிலை என்றால், சாதாரண அப்பாவி மக்களிடம் போலீசார் எப்படி நடந்து கொள்வார்களோ என்று கவலை ஏற்படுகிறது.
கடமையே கருத்தாக, நல்ல போலீசார் பலர் உள்ளனர். காவல்துறையினர் சிலரின் அத்துமீறலால் மனித உரிமைகள் பாதித்து, உயிரிழப்பு வரை செல்கிறது. இந்த சூழலில் போலீசார் சிலர் அராஜகப் போக்கை இன்னும் கைவிடாதது, தமிழக அரசுக்கு அவப்பெயரையே ஏற்படுத்தும் என்றார்.
இந்த பிரச்சனைக்கு ஏதேனும் பின்னணி இருக்கிறதா என்று, ராமச்சந்திரனிடம் கேட்டோம். அவர், “சொத்து தொடர்பான சிவில் வழக்கிற்கான என்னிடம் கட்சிக்காரர் ஒருவர் வந்திருந்தார். சென்னையில் பதிவாளர் அலுவலத்தில் புகார் அளிக்கும்படியும், இது தொடர்பாக சென்னையில் உள்ள வழக்கறிஞரை தொடர்பு கொள்ளும்படியும் அவர்களிடம் சொல்லி இருந்தேன்.
இந்த வழக்கில், நான் அனுப்பிய நபரின் எதிர்த்தரப்பினர் தான் சென்னை வேளச்சேரி போலீசை நாடியுள்ளனர். இந்த வழக்கில் இரு தரப்பினரிடமும் போலீசார் பணத்தை பெற்றுக் கொண்டு, பஞ்சாயத்து பேசி பைசல் செய்ய முற்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் தேவையின்றி என்னை சேர்க்க, வேளச்சேரி போலீசார் முற்படுகின்றனர். முறையான கோர்ட் சம்மனோ, வாரண்டோ இல்லாமல் போலீசார் உள் நோக்கத்துடன் என்னை தேடி வந்துள்ளனர்” என்றார்.






