தனியார் பள்ளி விடுதியில் இருந்த மாணவி தற்கொலை..!
கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியின் விடுதியில் இருந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் ஆசிரியர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஸ்ரீமதி என்ற மாணவி பிளஸ் டூ படித்து வந்தார்.
பள்ளியின் விடுதியில் தங்கி படித்து வந்த நிலையில் திடீரென்று அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் அவரது பெற்றோர்களிடம் கூறியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மாணவியின் உறவினர்கள் சடலம் வைக்கப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை முன்பாக திரண்டனர்.
இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. பள்ளிக்கு வந்த ஆசிரியர்களை மாணவியின் உறவினர்கள் சூழ்ந்துகொண்டு தாக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் ஆசிரியரின் செல்போனையும் அவர்கள் பறித்துக் கொண்டனர்.
இதனிடையே மாணவி கைப்பட எழுதி வைத்திருந்ததாகக் கூறி கடிதம் ஒன்றை மாவட்ட எஸ்பி செல்வகுமார் உறவினர்கள் முன்னிலையில் எடுத்துக் காட்டினார். அதில் விளையாட்டாக இருந்த தன்னை ஆசிரியர்கள் படிக்கச் சொல்லி கண்டித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து படிக்க வேண்டும் என ஆசிரியர்கள் தொந்தரவு தந்ததால் விரக்தியில் இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




