தமிழகத்தில் இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு..! மொத்த எண்ணிக்கை 1323 ஆக உயர்வு!!
தமிழகத்தில் இன்று புதிதாக 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள மொத்த எண்ணிக்கை 1323 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத் துறை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஏற்படத் தொடங்கியது முதல், முதலில் அமைச்சர் விஜயபாஸ்கர் தினமும் கொரோனா அப்டேப் கொடுத்து வந்தார். ஆனால் திடீரென அவர் பேட்டியளிப்பதை நிறுத்த, 15 நாட்களாக சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ், தினமும் சரியாக மாலை 6 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து தகவல்களை கொடுத்து வந்தார். இடையில் 2 நாட்கள் பீலா ராஜேஷ் அருகில் அமர்ந்திருக்க, தலைமைச் செயலாளர் சண்முகம் பேட்டி கொடுத்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன் திடீரென அமைச்சர் விஜய பாஸ்கர் திடீரென மீண்டும் வந்து ஒரு நாள் மட்டும் கொரோனா நிலவரம் குறித்த தகவல்களை விலாவாரியாக ஒப்பித்தார். நேற்றோ, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சுமார் ஒரு மணி நேரம் பேட்டி அளித்தார். கடந்த 18 நாட்களில் நேற்று தான் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக மிக குறைவாக 26 பேருக்கு என பதிவாகியிருந்தது. இதனை குறிப்பிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும், இன்னும் 2 , 3 நாட்களில் பாதிப்பு ஜீரோவாகி விடும் என்றும் கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்றைய கொரோனா நிலவரம் குறித்து சுகாதார அமைச்சரோ, சுகாதார செயலாளரோ யாரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை. சுகாதாரத் துறை சார்பில் பட்டியல் மட்டுமே அறிக்கையாக வெளியானது. அதன்படி இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,323 ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக இன்று தஞ்சாவூரில் 17 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 11 பேர், திருவள்ளூர் மற்றும் தென்காசியில் தலா 5 பேர், திருவாரூரில் 4 பேர், வேலூர், திருச்சியில் தலா 3 பேர், தேனி, நாகப்பட்டினம், விழுப்புரத்தில் தலா 2 பேர், திண்டுக்கலில் ஒருவர் என இன்று 56 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 29,673 பேருக்கு கொரோனா தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன எனவும் பலி எண்ணிக்கை 15 ஆக உள்ளது எனவும் தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.







