எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மரணத்தில் சந்தேகம் – காவல்துறைக்குச் சென்ற புகார்
கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி திடீர் உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக காலமானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
இவரது மறைவைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “கட்சி, குடும்பம் தாண்டி வட சென்னை மக்களின் இழப்பு” எனத் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து வி.எஸ். பாபுவின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது பெரம்பூர் இல்லத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது.வி.எஸ். பாபு மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் விஜய், “கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு உடல்நலக்குறைவால் மறைந்த செய்தி அறிந்து ஆழ்ந்த வேதனையும், துயரமும் அடைந்தேன். பொதுவாழ்வில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு, மக்களோடு மக்களாகப் பழகி, அனைவரின் அன்பையும், ஆதரவையும், நம்பிக்கையையும் பெற்றிருந்த வி.எஸ்.பாபு அவர்களின் திடீர் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
வி.எஸ்.பாபு அவர்களின் பிரிவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கொளத்தூர் தொகுதி மக்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து மறைந்த வி.எஸ். பாபுவின் பெரம்பூர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். மேலும், வி.எஸ். பாபு குடும்பத்தினருக்கு தனது ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு உடல் நிலைக் குறித்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என தேவராஜன் என்பர் நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில்தான் இன்று எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு காலமான செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தேவராஜன், எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காவல்துறைக்கு ஆன்லைன் மூலம் புகார் கொடுத்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





