--- --:--:-- --

சவுக்கு சங்கர் மனு தள்ளுபடி!

7

திரைப்பட தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு மிரட்டி ஆபாசமாக திட்டி தாக்கியதாக தன்மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம், விசாரணையை 6 மாதங்களில் முடிக்க கீழமை நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

 

 

தமிழக அரசியலில் அரசியல் விமர்சகராக அறியப்படும் சவுக்கு சங்கர் தனது யூடியூப் சேனல் மூலம் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இவரது கருத்து சமூகவலைதளங்களில் இவ்வப்போது விவாதங்களை எழுப்பி வருவது வழக்கம். யூடியூப் சேனல்களில் பேசுவது மூலம் பிரபலமான சவுக்கு சங்கர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், சமீபத்தில் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் இவருக்கு தண்டனை அறிவிக்கப்பட்டது. அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டது.

 

 

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரிடம் ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், அதனைத் தொடர்ந்து அவரிடமிருந்து ரூ.1 லட்சத்தைப் பறித்து, அவரைத் தாக்கி, ஆபாசமாகத் திட்டியதாகவும் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில், கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் 24 மற்றும் 25-ந் தேதிகளில் ‘சவுக்கு மீடியா’ என்ற தனது யூடியூப் சேனலில், ‘ரெட் அண்ட் ஃபாலோ’ (Red and Follow) திரைப்படம் குறித்து அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்கும் வகையில் சவுக்கு சங்கர் நேர்காணல்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டதாக அரசுத் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

 

 

மேலும் போதைப்பொருள் கடத்தல் மூலம் ஈட்டிய பணத்தில் இந்த திரைப்படம் தயாரிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவியதை தொடர்ந்து, அந்த வீடியோக்களை நீக்குமாறு திரைப்படத் தயாரிப்பாளர் மகேஷ், சவுக்கு சங்கரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவர் ரூ.10 லட்சம் கேட்டதாகவும், ஜூலை 1-ஆம் தேதி, ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு சங்கரின் அலுவலகத்திற்கு மகேஷ் சென்றபோது அவரை தாக்கி, ஆபாசமாகத் திட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 

 

மேலும் தன்னிடம் இருந்து ரூ1 லட்சம் பணத்தையும் சவுக்கு சங்கர் பறித்துக்கொண்டார் என்று மகேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர். இது குறித்து நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு, பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டப் பிரிவுகள் 61 (2), 109 (1), 126 (2), 191 (2), 296 (b), 310 (2), 317 (3), 353 (1) (b) மற்றும் 351 (3) உடன் இணைந்த பிரிவு 49-ன் கீழ் சவுக்கு சங்கருக்கு எதிராக காவல்துநை வழக்குப்பதிவு செய்திருந்தது.

 

 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலுவையில் இருந்து வரும் நிலையில், இந்த வழக்கின் இறுதி அறிக்கையை ரத்து செய்யக்கோரி சவுக்கு சங்கர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுபோன்ற ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று சவுக்கு சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், சாட்சிகளின் வாக்குமூலங்கள் சங்கருக்கு எதிராக உள்ளதால் விசாரணையின் மூலமாகவே உண்மை வெளியில் வரும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

 

 

மேலும், இந்தக் குற்றவியல் நடவடிக்கைகள் உள்நோக்கத்துடன் தொடங்கப்பட்டதா இல்லையா என்பதை விசாரணையின் முடிவில் மட்டுமே தீர்மானிக்க முடியும் என்றும் குறிப்பிட்ட சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கு நிலுவையில் உள்ள, ஆலந்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றம்-II (Judicial Magistrate-II) முன்பு சங்கர் தனது அனைத்து வாதங்களையும் விசாரணை நீதிமன்றத்தில் முன்வைக்க அனுமதி அளித்ததோடு, 6 மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கவும் உத்தரவிட்டு சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon