--- --:--:-- --

அழகிரி மகள் கயல்விழி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்!

8

சென்னை அடையாறு பகுதியில் செயல்பட்டு வரும் பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) கிளை மேலாளரைத் தாக்கிய வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில், தற்போது அவர் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரியின் மகள் கயல்விழி. சென்னை அடையாற்றில் இவருக்குச் சொந்தமான வணிக வளாகம் ஒன்றில், எஸ்பிஐ வங்கியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) கிளை செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த வங்கியின் லிப்ட் வேலை செய்யாமல் இருந்த நிலையில், இது குறித்து பழுதுபார்க்க, வங்கியின் சார்பில், கயல்விழியிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 

 

இது குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக வங்கியின் கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங், கயல்விழியின் உதவியாளரைத் தொடர்புகொள்ள முயன்றார். ஆனால் அவர் அழைப்பை ஏற்காததால், நேரடியாகக் கயல்விழியைத் தொடர்புகொண்டு லிப்ட் பிரச்னை குறித்து மேலாளர் புகாரளித்துள்ளார். தொடர்ந்து வங்கிக்கு நேரில் வந்த கயல்விழி, தனக்கு நேரடியாக போன் செய்தது குறித்து மேலாளர் ஹர்ஷீன் சிங்கிடம் காட்டமாக கேள்வி கேட்டு அவரது கன்னத்தில் அறைந்தததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கிருந்த சி.சி.டிவி. கேமராவில் பதிவாகி இருந்தது.

 

 

இந்த சம்பவம் குறித்து, வங்கி மேலாளரைத் தாக்கிய கயல்விழி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்பிஐ ஆர்.பி.ஓ (RBO) முதன்மை மேலாளர் நமச்சிவாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகார் மற்றும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆய்வு செய்த காவல்துறையினர், இச்சம்பவம் தொடர்பாக மு.க.அழகிரியின் மகள் கயல்விழி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் குற்றப்பத்தரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

 

அதன்படி, மு.க. அழகிரியின் மகள் கயல்விழி அழகிரிக்கு எதிராக அடையாறு காவல்துறையினர் சைதாப்பேட்டையில் உள்ள 9-வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அடுத்த விசாரணையை டிசம்பர் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. பாரத ஸ்டேட் வங்கி மண்டல வணிக அலுவலகம்-II இன் தலைமை மேலாளர் நமச்சிவாயம் அளித்த புகாரின் பேரில், அடையாறு காவல்துறையினர் கயல்விழி மீது பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் 296(b), 329(4), 115(2) மற்றும் 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

 

 

இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறை சார்பில் கயல்விழிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. சம்மன் பெற்றதைத் தொடர்ந்து விசாரணை அதிகாரி முன் ஆஜரான கயல்விழியிடம் சுமார் இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் அவர் முறைப்படி கைது செய்யப்பட்டு, காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணைகை்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon