கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 3 பேர் உயிரிழப்பு!
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே 100 அடி பள்ளத்தில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பழனி மதினா நகரைச் சேர்ந்த 19 பேர், கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சிக்கு டெம்போ வேனில் சென்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கொடைக்கானல் – பழனி சாலையில் சவரிக்காடு என்ற இடத்தில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் இருந்த சுமார் 100 அடி பள்ளத்தில் உருண்டு விபத்துக்குள்ளானது.
இதில் வேனில் பயணம் செய்தவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி அலறினர். அலறல் சத்தம் கேட்டு அவ்வழியாகச் சென்றவர்கள் உடனடியாக காவல் துறைக்குத் தகவல் அளித்தனர். நிகழ்விடத்திற்குச் சென்ற காவல் மற்றும் தீயணைப்புத் துறையினர் பள்ளத்தில் இறங்கி மீட்புப் பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கிய முதியவர்களான நிஜாமுதீன், அப்பாஸ் மற்றும் 27 வயதுடைய ஷேக் ஆகியோர் உயிரிழந்தனர். இரவு நேரம் என்பதால் பள்ளத்தில் இறங்கி மீட்புப் பணிகளை மேற்கொள்வதில் சற்று சிரமம் ஏற்பட்டது.
எனினும், காயமடைந்த ஓட்டுநர் சிலம்பரசன் உள்பட 16 பேர் கயிறுகள் மூலம் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம், சட்டமன்ற உறுப்பினர் ரவி மனோகரன், பழனி கோட்டாட்சியர் பிரியங்கா ஆகியோர் மருத்துவமனைக்கு நேரில் சென்று காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





