நாளை மறுநாள் வாக்குகள் எண்ணிக்கை..!
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. சட்டமன்ற தேர்தலை விட இடைத்தேர்தலில் குறைவான வாக்குகளே பதிவான நிலையில், நாளை மறுநாள் வாக்குகள் எண்ணப்படுகின்றன.கடந்த தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் வென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், தேர்தல் முடிவு வெளியான சில நாட்களில் தங்களது பதவியை ராஜினாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
அதனை தொடர்ந்து, மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகள் காலியாகின. இதையடுத்து இந்த இரண்டு தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.அதன்படி, திட்டமிட்டவாறு மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளில் நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. லையில் இருந்தே ஆண்கள், பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
தாராபுரத்தில் 83 வயது மூதாட்டி பேரனுடன் வந்து வாக்களித்ததுடன், மதுராந்தகத்தில் முதல் முறை வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்களித்தை காண முடிந்தது. ஓட்டு போட்ட இளம் வாக்காளர்கள் வெளியில் வந்து அடையாள மையை காட்டி செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதே போன்று, தாராபுரம் தொகுதியில் வேட்பாளர்கள் சத்தியபாமா, சுகன்யா, பானுமதி, கார்த்திகா, லட்சுமணன் தங்களது வாக்கை செலுத்தினர்.
மதுராந்தகத்தில் தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் உள்ளிட்டோர் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றினர். இதனிடையே, தாராபுரத்தில் தவெகவினர் டோக்கன் வைத்திருப்பதாகக் கூறி அதிமுகவினர் முற்றுகையிட்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது. தாராபுரம் கொளிஞ்சாவடியில் விசில் சின்னத்திற்கு வாக்களிக்க சொன்னதாக மூதாட்டி ஒருவர் குற்றஞ்சாட்டிய நிலையில், அலுவலர் தங்கமணி மாற்றம் செய்யப்பட்டார்.
காலை 7 மணிக்கு தொடங்கிய இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. வாக்குப்பதிவு முடிந்ததும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மதுராந்தகத்தில் 86.26% , தாராபுரத்தில் 80.30% வாக்குகள் பதிவாகியிருந்ததாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போல் புதுச்சேரி தட்டாஞ்சாவடியிலும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. அங்கு 80.81% வாக்குகள் பதிவாகியிருந்தது.
மதுராந்தகம், தாராபுரத்தில் ஆகிய இரு தொகுதிகளிலும் தவெக, திமுக, அதிமுக, நாதக, இடதுசாரிகள் என 5 முனை போட்டி நிலவும் சூழலில், இங்கு பதிவான வாக்குகள் வருகிற 9 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் வெற்றி வாய்ப்பு யார் பக்கம்? என்பதில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இரு தொகுதிகளிலும் மக்கள் அளித்த தீர்ப்பால், வெற்றிக்கனியை யார் பறிக்க போகிறார்கள் என்பது வெள்ளிக்கிழமையன்று தெரிந்துவிடும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




