தி.மு.க ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு!
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் துவரம் பருப்பு கொள்முதல் விலையில் மாற்றம் செய்யப்பட்டதன் மூலம், தவெக அரசு மூன்று மாதங்களில் சுமார் ரூ.187 கோடி சேமித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, முந்தைய கொள்முதல் விலையை விட கிலோவுக்கு ரூ.31 குறைவாக துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அரசுக்கு கணிசமான அளவில் நிதிச்சுமை குறைந்துள்ளதாகவும், அதே நேரத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களின் கொள்முதலில் இதுபோன்ற விலை வேறுபாடுகள் எவ்வாறு ஏற்பட்டன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சமூக செயற்பாட்டாளர் ஜெயராம் மற்றும் அறப்போர் இயக்கம் கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசிடம் தொடர்ந்து புகார்களை முன்வைத்து வந்ததாக கூறப்படுகிறது. குறிப்பாக, பொது விநியோகத் திட்டத்திற்கான பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அரசு கொள்முதல் செய்யும் போது, சந்தை விலையை விட அதிக விலையில் கொள்முதல் செய்யப்படுவதாகவும், இதற்கு பின்னால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் நிறுவனங்களின் கூட்டுச்சதி அல்லது கார்ட்டலைசேஷன் இருப்பதாகவும் அவர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
தற்போது கிலோவுக்கு ரூ.31 குறைவாக துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், கடந்த காலங்களில் அரசின் கொள்முதல் நடைமுறைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விகள் மீண்டும் கவனம் பெற்றுள்ளன. ஒரே பொருளை குறைந்த விலையில் கொள்முதல் செய்ய முடியும் என்ற நிலையில், முன்பு ஏன் அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டது, அந்த விலை நிர்ணயத்திற்கான அடிப்படை என்ன, டெண்டர் நடைமுறைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன, போட்டித்தன்மை உறுதி செய்யப்பட்டதா உள்ளிட்ட கேள்விகள் எழுகின்றன.
மேலும், அரசு கொள்முதல் செய்யும் அத்தியாவசியப் பொருட்களின் விலை நிர்ணயம் வெளிப்படையாகவும் போட்டித்தன்மையுடனும் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது. கொள்முதல் விலையில் ஏற்படும் சிறிய அளவிலான வேறுபாடுகள்கூட, மிகப்பெரிய அளவில் பொருட்கள் வாங்கப்படும் நிலையில், அரசுக்கு பல கோடி ரூபாய் கூடுதல் செலவை ஏற்படுத்தக்கூடும். அந்த வகையில், துவரம் பருப்பு கொள்முதலில் கிலோவுக்கு ரூ.31 குறைக்கப்பட்டிருப்பது மூன்று மாதங்களில் ரூ.187 கோடி அளவிலான சேமிப்பாக மாறியுள்ளதாக கூறப்படுவது, அரசு கொள்முதல் நடைமுறைகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியத்தை எடுத்துக்காட்டுவதாக பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், இந்த சேமிப்பு எவ்வாறு கணக்கிடப்பட்டது, முந்தைய கொள்முதல் விலை மற்றும் தற்போதைய விலை என்ன, மொத்தமாக எவ்வளவு அளவு துவரம் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டது, டெண்டர் மூலம் எத்தனை நிறுவனங்கள் பங்கேற்றன என்பது உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டால் மட்டுமே இதன் முழு தாக்கத்தை மதிப்பிட முடியும். கடந்த பத்து ஆண்டுகளாக அரப்போர் இயக்கம் எழுப்பி வந்ததாக கூறப்படும் கொள்முதல் விலை மற்றும் கார்ட்டல் குறித்த புகார்கள் தற்போது மீண்டும் அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் விவாதப் பொருளாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





