--- --:--:-- --

புலியை விரட்டிய வீடியோ குறித்து விசாரிக்க கர்நாடக அரசு உத்தரவு!

2

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் கடந்த 10 ஆம் தேதி நலத்திட்ட உதவி மற்றும் ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள வந்த தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசை முதுமலை புலிகள் காப்பகத்தில் தடை செய்யப்பட்ட வனப்பகுதிக்குள் வனத்துறையினர் அழைத்து சென்றனர். அங்கு விதவிதமாக போட்டோ மற்றும் வீடியோ எடுத்துக் கொண்டுள்ளார்.

 

மேலும், அடர்ந்த வனப்பகுதிக்குள் இருந்து புலி ஒன்று நடந்து சென்றது, இதனைப் பார்த்ததும் விரட்டிச் செல்வது போல் அவர் ஓடும் வீடியோ, மற்றொரு வீடியோவில், அவர் காட்டு யானை ஒன்றை நெருங்குவது போன்ற காட்சிகள் கர்நாடகாவின் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் நடந்ததாகக் கூறப்படுகிறது.

 

வனத்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில், வனத்துறைக்குச் சொந்தமான வாகனங்களில் அமைச்சர் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்வது அந்த விடியோவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில், வனத்துறையினர் எவ்வாறு அமைச்சரை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று ரீல்ஸ் எடுக்க அனுமதித்தனர்? என்பது போன்ற கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பினர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்யவும் கோரிக்கை விடுத்தனர். இதேபோல், தமிழக அரசியல் தலைவர்கள் அமைச்சரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்கள்.

 

 

இந்த விவகாரம் தொடர்பாக வனத்துறை அளித்த விளக்கத்தில், அமைச்சர் தங்கியிருந்த அச்சகரை பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதிக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்தப் புலி காணப்பட்டதாகவும், அது பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நடக்கவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்பட்டது. மேலும், அமைச்சரின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே வனத்துறை பணியாளர்கள் அவருடனும் அவரது குடும்பத்தினருடனும் சென்றிருந்ததாகவும், வீடியோ பதிவு செய்யப்பட்டபோது அமைச்சர் எந்தவொரு வாகனத்திலிருந்தும் கீழே இறங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

 

இந்நிலையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் வனத்துறை விதிகளை மீறி, புலியைத் துரத்திச் சென்று வீடியோ எடுத்ததாக தமிழக சமூகநலத்துறை அமைச்சர் வன்னி அரசு மீது புகார் எழுந்ததைத் தொடர்ந்து, இது தொடர்பாக விசாரணை நடத்த கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.

 

 

இந்த விவகாரம் குறித்து பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி, சம்பவத்தைத் தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தைச் சேர்ந்த அமைச்சர் தொடர்புடையவராக இருந்தாலும், வீடியோவில் காணப்படும் சஃபாரி வாகனம் கர்நாடகாவில் பதிவு செய்யப்பட்ட வாகனம் என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் கூறினார்.

 

 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “அமைச்சராக இருந்தாலும், பயன்படுத்தப்பட்ட வாகனம் கர்நாடகாவைச் சேர்ந்தது என்பதுதான் இங்கு முக்கியமான பிரச்சினை. அந்த வாகனத்தின் பதிவு எண் வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது” என்றார். இந்தச் சம்பவம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு நடந்திருக்கலாம் என்றும், வியாழக்கிழமை காலை தனது சமூக வலைதளப் பொறுப்பாளர் சுதர்ஷன் வீடியோவை அனுப்பிய பிறகே தனக்குத் தெரியவந்ததாகவும் ராமலிங்க ரெட்டி தெரிவித்தார்.

 

 

தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ நடவடிக்கை எடுக்குமாறு தனது அலுவலகத்துக்கு அறிவுறுத்தியதாகக் கூறிய அவர், கர்நாடக முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் (PCCF) மற்றும் காவல்துறைத் தலைவர் சலீம் ஆகியோருக்குக் கடிதம் எழுத உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், “வனப்பகுதிக்குள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயர் பதவியில் இருப்பவராக இருந்தாலும், அங்கு அமலில் உள்ள சட்டங்களையும் விதிகளையும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்று ராமலிங்க ரெட்டி வலியுறுத்தினார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon