--- --:--:-- --

நீட் விவகாரத்தில் அரசியல் வேண்டாம் – எதிர்க்கட்சிகளுக்கு கிரண் ரிஜிஜு பதில்

01

நீட் தேர்வுத் தாள் கசிவு விவகாரம் குறித்து எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாடாளுமன்றத்தில் உடனடியாக விவாதத்தைத் தொடங்க முன்வர வேண்டும் என்று எதிர்க்கட்சிகளுக்கு மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டின் மாணவர்களின் எதிர்காலம் மற்றும் நலன் சார்ந்த இந்த முக்கிய விவகாரத்தில் எவ்வித அரசியலும் செய்யக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 

நீட்-யுஜி (NEET-UG) 2026 தேர்வுத் தாள் கசிவு மற்றும் தேர்வு முறைக்கேடுகளுக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் சிஜேபி (CJP) அமைப்பினர் மற்றும் மாணவர்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. சென்னையிலும் இது தொடர்பாக போராட்டங்கள் நடந்து வருகின்றனர்.

 

இந்த நிலையில், நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரின் போது மாநிலங்களவையில் உரையாற்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜு, நீட் தேர்வு முறைக்கேடு குறித்து விவாதிக்க அரசு முதல் நாளில் இருந்தே 100 சதவீதம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். “அனைத்துக் கட்சிகளும் நீட் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன. ஆனால் விவாதத்திற்கு நிபந்தனைகளை விதிப்பது, விவாதத்தைத் தவிர்க்க சாக்குப்போக்குகளைத் தேடுவதற்குச் சமமாகும். உண்மையான அக்கறை இருந்தால், எவ்வித முன்நிபந்தனைகளும் இன்றி விவாதத்தில் பங்கேற்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

 

 

மேலும், விவாதத்தை இன்றே தொடங்க அரசு தயாராக உள்ளதாகவும், விவாதத்தின் நேரத்தையும் தேதியையும் தீர்மானிக்க அரசு திறந்த மனதுடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார். தேர்வுத் தாள் கசிவு வழக்குகளில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குற்றவாளிகளுக்கு விரைவான தண்டனையை உறுதி செய்ய விரைவு நீதிமன்றங்கள் (Fast-track courts) அமைக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடிஏற்கனவே உறுதியளித்துள்ளதை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

அதேவேளையில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், சிறப்பு விதிகளின் கீழ் முழுமையான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் நடவடிக்கைகளும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன.

 

எதிர்க்கட்சிகள் தங்களின் அரசியல் கருத்து வேறுபாடுகளைக் கடந்து, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான விவாதத்திற்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் மீண்டும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon