டெலிகிராம் செயலியை முடக்கிய உத்தரவை நீக்க முடியாது – டெல்லி உயர்நீதிமன்றம்
நீட் மறுதேர்வையொட்டி, டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி மத்திய அரசு பிறப்பித்த உத்தரவை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.கடந்த மாதம் 3ஆம் தேதி நடந்த நீட் தேர்வு, வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து செய்யப்பட்டு வரும் 21ஆம் தேதி மறு தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி, தேசிய தேர்வு முகமையின் பரிந்துரைப்படி, வரும் 22ஆம் தேதி வரை டெலிகிராம் செயலியைத் தற்காலிகமாக முடக்கி வைக்க மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது.
இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி தேஜஸ் காரியா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆரம்பத்திலேயே டெலிகிராமை முடக்கவில்லை என்றும், கடந்த 3-ஆம் தேதி அவசரக்கூட்டம் நடத்தி அதன் அடிப்படையிலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் மத்திய அரசு கூறியது.சட்டவிரோதமான Content-களை முன்கூட்டியே கண்டறிவதில் உள்ள தொழில்நுட்ப சிக்கலை டெலிகிராம் நிறுவனமும் ஒப்புக்கொண்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஒரு குறிப்பிட்ட தரப்பு மாணவர்கள் எழுதும் தேர்விற்காக, இந்தியாவில் உள்ள 15 கோடி பயனாளர்களின் உரிமைகளைப் பறிக்கலாமா? என மத்திய அரசிடம் வாய்மொழியாகக் கேள்வி எழுப்பினார். இருப்பினும், தேர்வு முறையின் முக்கியத்துவத்தைக் கருதி மத்திய அரசின் தடையை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி அறிவித்தார்.இதனால், டெலிகிராம் இடைக்கால முடக்கத்திற்கு தடை விதிக்க மறுத்து மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தேஜஸ் காரியா உத்தரவிட்டார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




