அடுத்த ஓராண்டுக்குள் பிரதமர் பதவியில் மோடி இருக்க மாட்டார்” – ராகுல் காந்தி
இந்தியாவில் தேர்தல் அடிப்படையில் வென்று ஜனநாயக ரீதியில் நீண்ட கால பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பிரதமர் மோடி விரைவில் எட்டவுள்ளார். நீண்ட காலப் பிரதமர் என்ற ஜவகர்லால் நேருவின் சாதனையை வரும் 10 ஆம் தேதி, பிரதமர் மோடி எட்டவுள்ளார். இவர்கள் இருவரின் பதவிக்காலத்தில் நாடு வெவ்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளது.
நேரு பிரதமரானபோது பல நூற்றாண்டு கால ஆங்கிலேய அடிமைத்தளையில் இருந்து புதிதாக சுதந்திரம் பெற்ற நாடாக இந்தியா இருந்தது. அதேநேரம், போட்டி மிகுந்த சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல் நிறைந்த தருணத்தில் பிரதமர் மோடி பதவியேற்றார்.
இருவரது பதவிக்காலத்தை ஒப்பிடும்போது எது சவாலாக இருந்தது என்பதைக் காட்டிலும் நெருக்கடிகள் உருவான விதமே பெருமளவில் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, பிரதமர் மோடி பதவிக்காலத்தில் நூற்றாண்டில் ஒரு முறை உருவாகும் பெருஞ்சவாலான கொரோனா போன்ற பெருந்தொற்று, சுகாதார, சமூக மற்றும் பொருளாதார நெருக்கடிகளை ஒரே நேரத்தில் ஏற்படுத்தியது.
மேலும் தொலைக்காட்சி, சமூக ஊடகங்கள் பெருகிவிட்ட சூழலில் உடனுக்குடன் மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் சூழலையும் கவனத்தில் கொள்ள வேண்டி உள்ளது. மேலும் நேரு பிரதமராக இருந்த காலத்தில், உலகில் இரு பெரும் வல்லரசுகள் மட்டுமே இருந்தன. ஆனால் தற்போது, ரஷ்யா-உக்ரைன் மோதல், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல், ஈரான்-அமெரிக்கா மோதல் என உலகச் சூழலே மாறிவிட்டிருக்கிறது எனலாம்.
இந்தப் போர்களால் உணவு விநியோகம், வர்த்தகப் பாதைகள், உலக அரசியல் நடைமுறைகள் எல்லாம் மாறிப் போயிருப்பதும் குறிப்பிடத்தக்கது. இது போல் தேசப் பாதுகாப்புச் சூழல், சைபர் கிரைம் போன்ற பிரச்சனைகள் தற்போதைய பிரதமர் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் முற்றிலுமாக எப்படி மாறியுள்ளன என்பதை காட்டுவதாக உள்ளது.
இதற்கிடையே அடுத்த ஓராண்டுக்குள் பிரதமர் பதவியில் நரேந்திர மோடி இருக்க மாட்டார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய அவர், நீட் மறுதேர்வு எழுதுவதற்கு அஞ்சி மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்டதை குறிப்பிட்டு மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பிடியில் இருந்த அரசு நிறுவனங்களின் அதிகாரிகள் பல முக்கிய தகவல்களை எதிர்க்கட்சிகளுடன் பகிர்ந்து கொள்வதாகவும் இது அரசுக்குள்ளேயே நடக்கும் நிறுவனங்களின் புரட்சி என்றும் குறிப்பிட்டார். தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுகள், நீட் மறுதேர்வால் மாணவி தற்கொலை போன்ற சம்பவங்கள் மற்றும் நிர்வாக முறைகேடுகளால் தற்போதைய கல்வி அமைச்சகம் ஒரு பேரிடர் அமைச்சகமாக மாறி விட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும், “நம் வாழ்நாளில் நாம் கண்டிராத ஒரு பயங்கரமான ‘பொருளாதார சுனாமி’ நாட்டிற்கு வரப்போகிறது. விலைவாசி உயர்வு மற்றும் வறுமையின் மீதான மக்களின் கோபம் வெடிக்கப் போகிறது. என்னுடைய கணிப்பு என்னவென்றால்… இன்னும் ஒரு வருடத்திற்குள் மோடி அவர்கள் பிரதமராக இருக்க மாட்டார்!”. என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




