--- --:--:-- --

கன்னியாகுமரி நேர்காணலில் ஸ்டாலின் கைக்குக் சென்ற பரிந்துரைக் கடிதம்..!

8

ன்னியாகுமரி தி.மு.க வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் நடந்த சுவாரசியங்களை இங்கு காணலாம். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட சீட் கேட்ட சுமார் 20 பேரும் கடந்த புதன்கிழமை அறிவாலயத்திற்கு அழைக்கப்பட்டனர். கடந்த முறை இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் போட்டியிட்டு தோற்ற ஆஸ்டின் இந்த முறை சீட் கேட்கவில்லை.

 

தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் அமர்ந்து தலைமைக் கழக பணிகளை மேற்கொள்வதிலேயே அவர் திருப்தி படுவதாக தெரிகிறது. எனவே புதுமுகம் ஒருவரையே இந்தத் தொகுதியில் தி.மு.க வேட்பாளராக நிறுத்துவது உறுதி ஆகிவிட்டது. வேட்பாளர் தேர்வுக்கான கோதாவில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தாமரை பாரதி, ஆர்.எஸ்.பார்த்தசாரதி, நடிகர் விஜயின் உதவியாளராகவும் சினிமா தயாரிப்பாளராகவும் இருந்து அண்மையில் தி.மு.க.வுக்கு வந்த பி.டி. செல்வக்குமார் உள்ளிட்டோர் அறிவாலயம் வந்திருந்தனர். சுமார் 20 பேரையும் மொத்தமாக உள்ளே அழைத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினர்.

 

‘ஒன்றிய செயலாளர் யாராவது பேசுங்க’ என கூறினார் ஸ்டாலின்। பிறகு அவராகவே முன் வரிசையில் இருந்த தாமரை பாரதியை பார்த்து, ‘நீ முன்னாள் ஒன்றியம் தானே? நீயே பேசு’ என்றாராம். உடனே தொகுதி நிலவரம் குறித்து அவர் பேசினார். பிறகு பி.டி.செல்வக்குமாரைப் பார்த்த ஸ்டாலின், ‘இவர்தான் விஜய் கட்சியில் இருந்து வந்தவர்’ என கட்சியின் பொது செயலாளர் துரைமுருகனுக்கு அறிமுகம் செய்து வைத்தார். விஜய் கட்சியில் இருந்து வந்தவரை நினைவில் வைத்து ஸ்பெஷலாக ஸ்டாலின் குறிப்பிட்டது இதர நிர்வாகிகளை திகைக்க வைத்தது.

 

 

தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, மடித்து வைக்கப்பட்ட கவர் ஒன்றை ஸ்டாலினிடம் நீட்டினார். அதை வாங்கி பிரித்த ஸ்டாலின், உள்ளே இருந்த கடிதத்தை பார்த்து சிரித்துக் கொண்டார். அந்தக் கடிதம், கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சாமித்தோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப் பதி பூஜித குரு பால பிரஜாதிபதி அடிகளார் கொடுத்து அனுப்பியது. ‘ஆர். எஸ். பார்த்தசாரதி அந்தப் பகுதியில் செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர்.

 

அவருக்கு சீட் கொடுத்தால் நானே தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்வேன். அய்யா வழி மக்கள் வாக்குகள் முழுவதையும் தி. மு. க. வுக்கு திருப்புவேன்’ என அதில் குறிப்பிட்டு இருந்தாராம் அடிகளார். பா.ஜ.க செல்வாக்கான கன்னியாகுமரியில் குறிப்பிடத்தக்க ஆன்மீகத் தலைவர் ஒருவரின் இந்த கடிதம் தலைமையின் தீவிர பரிசீலனையில் இருப்பதாகத் தெரிகிறது.

 

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மகளிர் அணி மாநில செயலாளர் ஹெலன் டேவிட்சன் உள்ளிட்டோர் நேர்காணலில் கலந்துகொண்டனர். பத்மநாபபுரம் தொகுதிக்கான நேர்காணலும் சுவாரசியமாக இருந்தது.

 

இந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு மீண்டும் சீட் கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து வந்திருந்த பலரும் குரல் கொடுத்தனர். யாருக்கு சீட் கொடுத்தாலும் அனைவரும் இணைந்து பணியாற்றி வெற்றிபெற வைக்க வேண்டும் என தலைமை அறிவுறுத்தி அனுப்பியதாக தெரிகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon