பாஜக – அதிமுகவின் சதியை முறியடிப்போம் – முதலமைச்சர் ஸ்டாலின்
தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் பேரறிஞர் பெருந்தகை அண்ணா நினைவுநாள் மடல். தாய்க்குப் பெயர் சூட்டி மகிழ்ந்த தனயன் என்ற பெருமைக்குரியவர், நமது மாநிலத்திற்குத் தமிழ்நாடு என்று பெயர்சூட்டிய பெருமகன் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் என்கிற நம் மக்களுக்கான அரசியல் இயக்கத்தை 1949-ஆம் ஆண்டு தொடங்கி, 18 ஆண்டுகளில் மக்களின் பேராதரவுடன் தி.மு.கழகத்தை அரியணை ஏற்றியவர். மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பது பேரறிஞர் அண்ணாவின் பொன்மொழி. ‘மக்களிடம் செல். மக்களுடன் வாழ். அவர்களிடமிருந்து கற்றுக்கொள். அவர்களை நேசி. அவர்களுக்கு சேவை செய். அவர்களுக்குத் தெரிந்ததிலிருந்து தொடங்கு’ என்பது அண்ணா நமக்கு வகுத்துத் தந்த அரசியல் பாதை.
தன்னுடைய ஆட்சிக்காலத்தில் உலகம் வியக்கும் வண்ணம் இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டைச் சென்னையில் நடத்தி, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட ஏற்பளிப்பு வழங்கி, தமிழ்நாட்டில் என்றைக்குமே இந்திக்கு இடமில்லை என்கிற வகையில், தமிழ் – ஆங்கிலம் எனும் இருமொழிக் கொள்கையை நிலைநாட்டி, தமிழ்நாடு என்று மாநிலத்திற்குப் பெயர்சூட்டி, தமிழ்நாடு அரசின் இலச்சினையில் ‘வாய்மையே வெல்லும்’ என்று தமிழை இடம்பெறச் செய்த பேரறிஞர் அண்ணா அவர்களின் சிறப்புமிக்க ஆட்சி இரண்டாண்டுகள் கூட முழுமையாக நீடிக்கவில்லை. கொடிய புற்றுநோய் காரணமாக இயற்கை நம் அண்ணனைப் பறித்துக்கொண்டது.
தவித்து நின்றது தமிழ்நாடு. கலங்கி அழுதனர் கழகத்தினர். அண்ணாவின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள அலைகடலெனத் திரண்டனர் தமிழர்கள். அது உலக சாதனை அளவாக கின்னஸ் புத்தகத்தில் பதியக்கூடிய வகையில் அமைந்தது. அண்ணாவை இழந்துவிட்ட கழகத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் வேறு கதி ஏது என்று மாநிலமே கலங்கி நின்ற நிலையில்தான், கழகத்தை இதயத்திலும், ஆட்சியைத் தோளிலும் சுமந்தார் நம் உயிர்நிகர் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர். 50 ஆண்டுகாலம் இந்த இயக்கத்தை வழிநடத்தி, 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, நவீனத் தமிழ்நாட்டைக் கட்டமைத்தார்.
தன் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளான நமக்கு, ஐம்பெரும் முழக்கங்களை வழங்கினார் முத்தமிழறிஞர் கலைஞர். அதில், முதல் முழக்கமே ‘அண்ணா வழியில் அயராது உழைப்போம்’ என்பதுதான். சொன்னதைச் செய்வோம் என்பதை அரசியல் இலக்கணமாகக் கொண்ட தலைவர் கலைஞர், அதன்படி உழைத்தார், உழைத்தார், 81 ஆண்டுகால பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரராகத் தன் 95 வயது வரை ஓயாமல் உழைத்தார்.
அண்ணா வழி என்பது அன்பு வழி. அறவழி. சுயமரியாதைப் பாதையில் சமூகநீதி எனும் இலக்கை அடைகின்ற வழி. உறுதிமிகுந்த அந்த இலட்சியப் பாதையில், அண்ணா வழியில் அயராது உழைத்தால்தான் ஆதிக்கமற்ற சமுதாயத்தை அமைக்க முடியும், இந்தித் திணிப்பை என்றும் எதிர்த்து இன்பத்தமிழ் மொழியைக் காத்திட முடியும், வன்முறை தவிர்த்து வறுமையை வெல்ல முடியும். மாநிலத்தில் சுயாட்சியையும் மத்தியில் கூட்டாட்சியையும் நிலைநாட்ட முடியும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் ஐம்பெரும் முழக்கங்களை நமக்கு வழங்கினார் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்.
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்குப் பிறகு இந்த இயக்கம் என்னவாகும் என்று நினைத்தவர்களுக்கு, எதுவும் ஆகாது.. அண்ணா வழியிலேயே தொடர்ந்து பயணிக்கும் என்பதை உணர்த்தும் வகையில், அரைநூற்றாண்டு காலம் இந்த இயக்கத்தைத் தலைமையேற்று வழிநடத்தியவர் அண்ணாவின் கொள்கைத் தம்பியான முத்தமிழறிஞர் கலைஞர்.
வழிநடத்தியது மட்டுமின்றி, ஆண்டுதோறும் அண்ணா நினைவிடம் நோக்கி அவரது நினைவு நாளான பிப்ரவரி 3-ஆம் நாள் அமைதிப் பேரணியில் அவரே நடந்தார். அவர் வழியில் நாம் நடந்தோம். 50 ஆண்டுகளுக்கு முன் நெருக்கடிநிலைக் காலத்தில் கழக ஆட்சி கலைக்கப்பட்டு, மிசா சட்டத்தின்கீழ் கழக முன்னோடியினர் பலருடன், உங்களில் ஒருவனான நானும் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதைகளை எதிர்கொண்ட தருணத்தில், மன உறுதி குலையாமல் இந்திய ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டத்தை முன்னெடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.
அந்த நெருக்கடியான நிலையிலும், அண்ணா நினைவு நாளில் அமைதிப் பேரணியை நடத்தினார். ‘அண்ணா துயிலுமிடத்தில் அஞ்சலி செலுத்த இயலாதோர் பட்டியல்’ என்று முரசொலியில் வெளியிட்டு, கைதான கழகத் தோழர்களின் விவரங்களைப் பத்திரிகைத் தணிக்கையை மீறி, கழகத்தினரும் அவர்தம் குடும்பத்தினரும் அறிந்துகொள்ளும்படி செய்தவரும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர்தான்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





