மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் அறங்காவலர்கள் து.சுப்பு லெட்சுமி, எம்.செல்லையா, டாக்டர் மு.சீனிவாசன், எஸ்.மீனா ஆகியோர் மீண்டும் 2-வது முறையாகப் பொறுப்பேற்ற நிலையில், 2023 முதல் 2025-ம் ஆண்டு வரையிலான செயல்பாட்டு அறிக்கையைச் சமர்ப்பித்தனர்.
அந்த அறிக்கையில், வீர வசந்தராயர் மண்டபத் திருப்பணிகளில் கிரானைட் தூண்கள் நிறுவப்பட்டு இறுதிக்கட்டப் பணிகள் நடந்து வருவதாகவும், கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனைத்து கோபுரங்களிலும் சேதமடைந்த சிற்பங்கள் பாரம்பரிய முறையில் சீரமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கோபுர ஓவியப் பணிகள், கூரை ஓடுகள் மாற்றம் மற்றும் கோயிலுக்குள் உள்ள கமலம் ஓவியங்கள் உள்ளிட்ட கலைப் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன.
பிரசாத சமையலறை நவீனமயமாக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு வசதிக்காக கூடுதலாக 75 சிசிடிவி கேமராக்கள் பொருத்தத் திட்டமிடப்பட்டு இதுவரை 50 கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சித்திரைத் திருவிழா திருக்கல்யாணத்தின்போது ஆர்.எப்.ஐ.டி (RFID) தொழில்நுட்பத்தில் தரிசன டிக்கெட் முறை அறிமுகப்படுத்தப்பட்டு கூட்ட நெரிசல் வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தப்பட்டது. நிர்வாக ரீதியாக, 6 அதிகாரப்பூர்வ கோயில் வழிகாட்டிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஏழுகடல் வணிக வளாக வாகன நிறுத்தம் ஏலத்தில் விடப்பட்டதோடு, மீனாட்சி திரையரங்க வளாகம் மற்றும் பொன்மேனி பகுதியில் உள்ள கோயில் நிலங்கள் மூலம் வருவாய் ஈட்டச் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நான்கு ராஜகோபுரங்கள் உள்ளிட்ட அனைத்து கோபுரப் பணிகளும் முடியும் தருவாயில் உள்ளதால், கும்பாபிஷேகத்திற்கான முன்னேற்பாடுகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.






