--- --:--:-- --

தமிழகத்தில் ரூ.10 கோடியில் 25 அன்புச் சோலை மையங்கள் தொடக்கம்..!

10

வேலை முடிந்துவிட்ட பிறகு, 60 வயதுக்கு மேற்பட்ட பல முதியவர்கள் குடும்பத்தில் புறக்கணிக்கப்படுவதையும், தனிமையையும், மனச்சோர்வையும் எதிர்கொள்கின்றனர். தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் நல்வாழ்வை மேம்படுத்தவும், வீட்டில் சோர்ந்து போகாமல் ஊக்கம் பெறவும் உதவும் வகையில் தமிழக அரசால் ஒரு உன்னதமான திட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர்தான் ‘அன்புச் சோலை திட்டம்’.

 

இந்தத் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் ‘அன்புச் சோலை – முதியோர் மனமகிழ் மையங்கள்’, மூத்த குடிமக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும் சமூக மையங்களாகச் செயல்பட உள்ளன. இந்த மையங்கள் முதியோரின் குடும்பப் பிணைப்பு தொடரவும், அதே சமயம் பாதுகாப்பான சூழலில், அர்த்தமுள்ள வகையில் பகல் நேரங்களைக் கழிக்கவும் உதவும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

 

இந்த திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று (நவம்பர் 10, 2025) திருச்சி பொன்மலைப்பட்டியில் நேரில் தொடங்கி வைத்தார். ரூ.10 கோடி செலவில் மொத்தம் 25 ‘அன்புச் சோலை’ மையங்கள் மாநிலம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ளன. திருச்சியில் நடந்த மையத்தின் தொடக்க விழா தவிர, மற்ற 24 மையங்களும் காணொளி காட்சிகள் மூலமாகத் திறந்து வைக்கப்பட்டன.

 

திருச்சியில் நடைபெற்ற விழாவில், 25 அன்புச் சோலை மையங்களை முதல்வர் காணொலி வாயிலாகத் திறந்து வைத்ததுடன், அங்கு கூடியிருந்த மூத்த குடிமக்களுக்கு மகளிர் சுய உதவிக் குழுவினரால் தயாரிக்கப்பட்ட சிறு தானிய உணவு வகைகள் மற்றும் சத்துமாவு கொண்ட பெட்டகங்களை வழங்கினார்.

 

பின்னர், முதியவர்களுடன் உற்சாகமாகக் கலந்துரையாடினார். அப்போது திடீரென, அங்கிருந்த கேரம் போர்டு (Carrom Board) விளையாட்டில் அவர்களுடன் சேர்ந்து விளையாடினார். முதல்வரின் இந்தச் செயல் முதியவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதுடன், அவரும் பெரிதும் மகிழ்ந்தார்.

 

இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, கீதா ஜீவன், எஸ்.எஸ்.சிவசங்கர், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மெய்யநாதன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, துரை வைகோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

அரசு அதிகாரிகள் அளித்த தகவலின்படி, இந்த அன்புச் சோலை மையங்கள் முதியோருக்காக பொழுதுபோக்கு அம்சங்கள், யோகா பயிற்சிகள், நூலகம் மற்றும் தேவையான திறன் மேம்பாட்டு சேவைகள் உள்ளிட்ட பல வசதிகளைக் கொண்டுள்ளது.

 

ஒவ்வொரு மையமும் குறைந்தபட்சம் 50 மூத்த குடிமக்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்கள் பகல் நேரங்களில் மட்டுமே செயல்படும். முதியவர்கள் இங்கு தோழமை மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகளில் ஈடுபடலாம்.

 

தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன், மையங்களுக்கு வரும் முதியவா்களுக்கு மதிய உணவு மற்றும் சிற்றுண்டி இலவசமாக வழங்கப்படுகிறது. முதியோரின் விரிவான பராமரிப்பை உறுதி செய்வதற்காகத் தகுதி வாய்ந்த பராமரிப்பாளர்கள் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்கள் (Physiotherapists) பணியமா்த்தப்பட்டுள்ளனர்.

 

முதியோர் எளிதில் சென்றடையும் வகையில் போக்குவரத்து வசதியுள்ள இடங்களிலேயே அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon