ஆம்பூர் கலவர வழக்கு – குற்றவாளிகள் 22 பேருக்கான தண்டனை விவரம்
திருப்பத்தூர் ஆம்பூர் கலவர வழக்கில் 22 நபர்களை குற்றவாளிகள் என தீர்ப்பளித்த மாவட்ட நீதிமன்றம், 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு, திருப்பத்தூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதியைச் சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா மாயமானார்.
இது தொடர்பான புகாரில் பள்ளிகொண்டா காவல் நிலைய காவல்துறையினர் ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹமது என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணையின் போது, அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் ஷமீல் அகமது சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அந்த இளைஞர் காவலில் இருந்தபோது காவல்துறையினர் தாக்கியதாலேயே உயிரிழந்ததாக ஷமீல் அகமதுவின் உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதில் ஷமீல் அகமது உறவினர்கள், இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்துகள், காவல்துறை வாகனங்கள், மதுபான கடை, தனியார் மருத்துவமனை மற்றும் கடைகள் உள்ளிட்டவை சேதப்படுத்தப்பட்டன. இதில் 71 காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த வழக்கில் மொத்தம் 191 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது.
இந்த வழக்கில் திருப்பத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இதில் 22 நபர்கள் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிமன்றம் மற்ற 169 நபர்களை வழக்கில் இருந்து விடுதலை செய்து உத்தரவிட்டது. மேலும், இந்தப் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்திய ஆம்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. அஸ்லாம் பாஷா சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டு தீர்ப்பளித்தது.
இதனையடுத்து, குற்றவாளிகளுக்கான தண்டனை விவரத்தை மாவட்ட நீதிமன்றம் அறிவித்தது. அதன்படி, குற்றவாளிகள் என உத்தரவிடப்பட்ட 22 நபர்களுக்கும், அவர்களின் குற்றப் பிரிவுகளுக்கு ஏற்ப 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், பாதிக்கப்பட்ட இருவருக்கு தலா ரூ. 10 லட்சமும், கலவரத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சமும் நிவாரணமாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




