தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் சேரும் 6.50 லட்சம் பிகார் மாநிலத்தவர்கள்!
பிகாரில் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்ட 36 லட்சம் பேரில் ஆறரை லட்சம் பேர் தமிழ்நாட்டு வாக்காளர் பட்டியலில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிகாரில் நவம்பர் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொண்டது.
கடந்த மாதம் 26ஆம் தேதி சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நிறைவு பெற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், அதில் 65 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
ஏறத்தாழ 22 லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், 7 லட்சம் பேர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பதிவு செய்ததாகவும் , 36 லட்சம் பேர் பிகாரில் இருந்து நிரந்தரமாக வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்ததாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதில், பிகாரில் இருந்து வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்தவர்களில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தமிநாட்டில் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் மட்டும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த மூன்றரை லட்சம் பேர் தங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதுதவிர, தொழில் நகரங்களான கோவை, திருப்பூரிலும் கணிசமான எண்ணிக்கையில் பிகார் மாநிலத்தவர்கள் தங்கி இருப்பதாக கூறப்படுகிறது. பிகாரைத் தொடர்ந்து தமிநாட்டிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் மேற்கொள்ளும் நிலையில், அவர்கள், தமிழ்நாட்டு வாக்காளராக மாற மனு அளித்து அதை தேர்தல் ஆணையம் ஏற்றால் அவர்கள் இங்கேயே வாக்களிப்பார்கள் என தெரிகிறது.
இதனிடையே, வார்டு வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் அட்டையில் திருத்தம் அல்லது புதிதாக பெயர் சேர்க்க செப்டம்பர் மாதம் 1ஆம் தேதி வரை மக்கள் விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பின் தான் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அதன் அடிப்படையில் பிகார் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




