--- --:--:-- --

இதயத் துடிப்பில் வேறுபாடு – ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை

4

மிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கடந்த திங்கள்கிழமை (ஜூலை 21) காலை தனது வழக்கமான நடைப்பயிற்சியின்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

இந்தச் செய்தி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து, முதல்வருக்குத் தொடர்ச்சியாகப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில், முதல்வர் மருத்துவமனையில் இருந்தபடியே தனது அலுவல் பணிகளைக் கவனித்து வந்தார்.

 

இந்த நிலையில், மருத்துவப் பரிசோதனையின் ஒரு பகுதியாக வியாழக்கிழமை காலை அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் துரைமுருகன் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செய்யப்பட்ட மருத்துவப் பரிசோதனைகள் குறித்து சென்னை அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் ஒரு விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில் “முதலமைச்சருக்கு ஏற்பட்ட தலைசுற்றல் பிரச்சினை தொடர்பாக க்ரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

 

இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி. செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்போலோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதலமைச்சர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon