பெரம்பூர் – அம்பத்தூர் இடையே புதிதாய் இரு ரயில் பாதைகள்!
தெற்கு ரயில்வே பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. அந்த வகையில், சென்னையில் புதிதாக இரு ரயில் பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளது. சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய ரயில்கள் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
இதனால், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கடுமையான கூட்ட நெரிசலை சந்தித்துவருகிறது. இந்நிலையில், இந்தக் கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளின் பயணத்தை எளிதாக்கவும், தெற்கு ரயில்வே பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகிறது.அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் கூட்ட நெரிசலை தவிர்த்து, புதிய பெரம்பூர் ரயில் முனையத்துடன் இணைப்பு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது.
இதற்காக பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரையிலான 6.4 கி.மீ தூரத்திற்கு மேலும் இரு ரயில் பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.இந்த இரு ரயில் பாதைகளுக்காக ரூ. 182.01 கோடியை தெற்கு ரயில்வே ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பணி 2028ஆம் ஆண்டு நிறைவடையும் எனவும், அதன்பிறகு ரயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துடன் ரயில் நிலையத்தை இணைக்கும் பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், பெரம்பூர் – அம்பத்தூர் இடையே மேலும், இரு ரயில் பாதைகளுக்கு தெற்கு ரயில்வே அறிவிப்பை வெளியிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




