--- --:--:-- --

பகிரங்க குற்றச்சாட்டுகளை வைக்கும் டிஎஸ்பி.. விளக்கம் கொடுக்கும் காவல்துறை!

1

யிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பியின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல் துறையால் பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், நடந்தே பணிக்கு டிஎஸ்பி சென்று வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை உயரதிகாரிகள் மீது அடுத்தடுத்து பகிரங்க குற்றச்சாட்டுகளை டிஎஸ்பி கூறியுள்ள நிலையில், இந்த சர்ச்சைக்கு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட விளக்கம் என்ன? மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு டிஎஸ்பியாக சுந்தரேசன் கடந்த நவம்பர் மாதம் முதல் பணியாற்றி வருகிறார்.

 

இவர் பொறுப்பேற்றது முதல் சட்டவிரோத சாராயம் விற்பனை மற்றும் மது கடத்தலில் ஈடுபடுவோர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். மயிலாடுதுறை மாவட்டத்தில் அனுமதியின்றி செயல்பட்ட 23 டாஸ்மாக் பார்களுக்கு சீல் வைத்துள்ளதுடன், சட்டவிரோத சாராயம் மற்றும் மதுபான கடத்தல் தொடர்பாக 1200க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளார்.

 

அவர்களில் 700 பேரை டிஎஸ்பி சுந்தரேசன் சிறைக்கு அனுப்பியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. மேலும் தொடர் கடத்தலில் ஈடுபட்ட 5 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இப்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் மது கடத்தல் கும்பலுக்கு சிம்ம சொப்பனமாக திகழும் டிஎஸ்பி சுந்தரேசனின் நான்கு சக்கர வாகனம் மாவட்ட காவல்துறையால் பறிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.

 

முதலமைச்சர் வருகைக்கு முன்னர் அமைச்சர் எஸ்கார்டு செல்வதற்காக டிஎஸ்பி சுந்தரேசனின் வாகனத்தை கேட்டு கொடுக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவரை பாதுகாப்பு பணிக்காக வெளியூருக்கு அனுப்பி வைத்த மாவட்ட காவல்துறையினர், மீண்டும் பணிக்கு வந்தவுடன் வாகனத்தை அனுப்பாமல் பறித்துக்கொண்டதாக சொல்லப்படுகிறது.

 

இதனால் டி.எஸ்.பி சுந்தரேசன் சில நாட்களாக இருசக்கர வாகனத்தில் பணிகளுக்கு சென்று வந்ததாகவும், இருசக்கர வாகனத்திலே ரோந்து பணிகளை மேற்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டி.எஸ்.பி சுந்தரேசன் கடந்த வியாழக்கிழமை காலை தனது வீட்டில் இருந்து மதுவிலக்கு பிரிவு அலுவலகத்திற்கு நடந்தே சென்றது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

மது, சாராயம் உள்ளிட்ட போதைப் பொருளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொண்டு வரும் நேர்மையான டிஎஸ்பியை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை பந்தோபஸ்து டியூட்டி என்ற பெயரில் பல்வேறு மாவட்டங்களுக்கு பணிக்கு செல்லுமாறு தூக்கி அடிப்பதும், பணிக்குத் திரும்பிய டிஎஸ்பிக்கு வாகனத்தை வழங்காமல் நடந்து செல்லும் சூழ்நிலைக்கு தள்ளியுள்ளதாகவும் அடுத்தடுத்து புகார்கள் எழுந்தன.

 

இதற்கு முன்னதாக மாநில மனித உரிமை கமிஷனில் டிஎஸ்பியாக பணியாற்றிய சுந்தரேசன், காஞ்சிபுரம் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் கொலை வழக்கு, பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பான என்கவுன்டர்களில் விசாரணை அதிகாரியாக பணியாற்றியுள்ளார். அப்போது அவர் காவல்துறையினரின் தவறுகளை தன் அறிக்கையில் சுட்டிக்காட்டியதால் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

 

டிஎஸ்பிக்கு வாகனம் வழங்கப்படாதது குறித்து மாவட்ட காவல்துறையிடம் விளக்கம் கேட்டபோது, அவரது வாகனம் பழுது காரணமாக ரிப்பேர் செய்ய அனுப்பப்பட்டுள்ளதாக விளக்கம் அளிக்கப்பட்டது. அதேபோல் பரவும் தகவல்கள் அனைத்தும் வதந்தி என்று திட்டவட்டமாக மறுக்கப்பட்டது. ஆனால் அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிஎஸ்பி சுந்தரேசன் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

 

தன்னை சஸ்பெண்ட் செய்தாலும் பரவாயில்லை, தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை தேவை என ஆவேசமாக குறிப்பிட்டார். வளைந்து கொடுக்காத அதிகாரிகள் நேர்மையாக இருப்பதற்காக தண்டிக்கப்படுகிறார்கள் எனக் குறிப்பிட்ட அவர், உயர் அதிகாரிகள் பலர் தனக்கு அழுத்தம் கொடுப்பதாக குற்றம்சாட்டினார்.

 

எனக்கு வாகனம் அளிக்காத காரணத்தால் இரு சக்கர வாகனத்தில் ரோந்து சுற்றும் நிலைமை உள்ளது. எனக்கு இன்னும் ஏழு வருட பணி உள்ள நிலையில், விருப்ப ஓய்வுக்கு நிர்பந்தத்தின் பேரில் மனு அளித்துள்ளதாக குறிப்பிட்டார்.

 

இதனிடையே டிஎஸ்பி சுந்தரேசனின் பகிரங்க குற்றச்சாட்டுகள் குறித்த கேள்விகளுக்கு, அனைத்தும் தவறான தகவல்கள் என எஸ்.பி. ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். காவல்துறையில் உயர் அதிகாரிகள் மத்தியில் எழுந்துள்ள இந்த மோதல் தகுந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு ஒரு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon