--- --:--:-- --

வீடுகளில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்த அனுமதி அவசியம்..!

5

திருவாரூர் மாவட்டத்தில் ஜோசப் வில்சன் என்பவர் அனுமதி இல்லாமல் வீட்டில் நடத்திய பிரார்த்தனைக் கூட்டத்திற்கு எதிராக மாவட்ட நிர்வாகம் சீல் வைத்ததையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், எந்த அனுமதியும் இல்லாமல் வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்தக் கூடாது என்று உத்தரவிட்டார்.

 

திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுகா, அத்திக்கடையில் கிறிஸ்தவ மத போதகர் ஜோசப் வில்சன் என்பவருக்குச் சொந்தமான வீட்டில் பிரார்த்தனைக் கூட்டம் நடத்திய விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

 

கடந்த 2023 ஆம் ஆண்டு, ஜோசப் வில்சன் அத்திக்கடையில் ஒரு வீட்டை வாங்கி, அதில் பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்தத் தொடங்கினார். இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், குடவாசல் காவல் ஆய்வாளர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்.

 

இதையடுத்து, அந்த கட்டிடத்திற்கு கட்டிட அனுமதி மற்றும் தேவாலயம் கட்டுவதற்கான திட்ட அனுமதி கோரி ஜோசப் வில்சன் மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தார். ஆனால், மாவட்ட ஆட்சியர் இந்த விண்ணப்பங்களை நிராகரித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, வட்டாட்சியர் அந்த பிரார்த்தனைக் கூடத்திற்கு சீல் வைத்தார்.

 

வட்டாட்சியரின் நடவடிக்கையை எதிர்த்து ஜோசப் வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ், பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்தார், சென்னை உயர்நீதிமன்றம் 2021 ஆம் ஆண்டில் பிறப்பித்த தீர்ப்பின்படி, பிரார்த்தனைக் கூடம் அல்லது மண்டபம் கட்ட வேண்டுமானால், உரிய அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறுவது அவசியம்.

 

எனவே, எந்த அனுமதியையும் பெறாமல் மனுதாரர் பிரார்த்தனைக் கூட்டம் நடத்த உரிமை இல்லை. வீட்டை பிரார்த்தனை அரங்காக மாற்ற அனுமதி இல்லை: மனுதாரர் தனது வீட்டை பிரார்த்தனை அரங்கமாக மாற்றவும் சட்டப்படி அதிகாரம் இல்லை.

 

மனுதாரரின் வீட்டிற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற வேண்டும். இருப்பினும், மனுதாரர் அந்த வீட்டில் பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்தக்கூடாது. ஒருவேளை அந்த வீட்டை பிரார்த்தனை அரங்கமாக மாற்ற விரும்பினால், மனுதாரர் மீண்டும் மாவட்ட ஆட்சியரை அணுகி உரிய அனுமதி கோரலாம்.

 

மனுதாரர் எந்த அனுமதியையும் பெறாமல் மீண்டும் அந்த வீட்டை பிரார்த்தனை அரங்கமாகப் பயன்படுத்த முயற்சித்தால், மாவட்ட ஆட்சியர் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon