இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும்..!
தமிழ்நாட்டில் 7 இடங்களில் நேற்று வெயில் சதம் அடித்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து வெயில் வாட்டி வருகிறது. அதன்படி, நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ஈரோட்டில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், மதுரை நகரில் 102 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலையும் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, கரூர் பரமத்தி, நாகை, பாளையங்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் நூறு டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் வாட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 28-ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்க வாய்ப்புள்ளதாகவும், சென்னை மற்றும் புறநகரில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




