நீலகிரி மாவட்டத்தில் இன்று ரெட் அலர்ட்..!
தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று பரவலாக மழை பொழிந்தது. இன்று அதிகனமழைக்கான வாய்ப்பிருப்பதால் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி நிலவியதால் தமிழ்நாட்டில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது.
நாகை மாவட்டத்தில் புத்தூர், சிக்கல், ஆழியூர், தேவூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டியது.இந்த மழையால் நேரடி விதைப்பு முறையில் நெல் சாகுபடிக்கு திட்டமிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 2வது நாளாக வாலாஜாபாத், ஓரிக்கை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் காற்றுடன் கனமழை பொழிந்ததால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை சுற்றியுள்ள பகுதிகளில் அரைமணி நேரமாக மிதமான மழை பொழிந்தது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் பகலில் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து, குத்தாலம், கோமல், ஸ்ரீகண்டபுரம், மங்கைநல்லூர், உள்ளிட்ட பகுதிகளில் மழை பொழிந்தது. சீர்காழி மற்றும் சுற்றுவட்டாரங்களான சட்டநாதபுரம், எடமணல் உள்ளிட்ட பகுதிகளிலும் இடியுடன் மிதமான மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களான, நீப்பத்துரை, புதுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது. திருவாரூர் மாவட்டத்தில் விளமல், வாழவாய்க்கால், உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பொழிந்தது. இந்த மழை குறுவை சாகுபடி செய்த விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
தருமபுரியில் இலக்கியம்பட்டி,பாரதிபுரம், அதியமான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்தமழையால், சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. மழையால், பள்ளி,கல்லூரி சென்றவர்கள், வேலைக்கு சென்றவர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையால், காளிகேசம் ஆற்றில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
கேரளாவை ஒட்டிய, களியக்காவிளை, குழித்துறை , மார்த்தாண்டம் பகுதிகளிலும் ஆங்காங்கே விட்டு விட்டு மழை பொழிந்தது.
கோவையில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டு அங்கு பேரிடர் மீட்புக்குழுவினர் களமிறக்கப்பட்ட நிலையில் நேற்று மாலையில் காந்திபுரம், ராமநாதபுரம், உக்கடம் பகுதிகளில் மிதமான மழை பொழிந்தது. நீலகிரி மாவட்டம் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பொழிந்தது.
தமிழகத்தில் நேற்று மதுரை, சென்னை மீனம்பாக்கம், திருத்தணி என 3 இடங்களில் தலா 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று மற்றும் நாளை ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, நெல்லை, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று மிக கனமழையும், தேனி மற்றும் திண்டுக்கல்லில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும் சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




