--- --:--:-- --

பட்டா மாறுதலுக்கு ஸ்ட்ரெச்சரில் அழைத்து வரப்பட்ட 90 வயது மூதாட்டி உயிரிழப்பு..!

1

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த நாரணாபுரத்தை சேர்ந்த 90 வயது மூதாட்டியான செல்லமாளுக்கு மாதப்பூரில் 27 ஏக்கர் பரப்பளவில் சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தனது வாரிசுதாரர்களுக்கு பட்டா மாற்றி கொடுக்க முயன்ற போது, அந்த இடத்தை வேறு சிலர் அபகரித்திருப்பது தெரியவந்தது.

 

இது தொடர்பாக உரிய முறையில் ஆய்வு செய்து தங்களுக்கு உரிய சொத்தை மீட்டுத்தருமாறு மூதாட்டி தரப்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கப்பட்டிருந்த நிலையில் ஐந்து முறை துணை வட்டாட்சியர் ரத்து செய்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மூதாட்டியை நேரில் ஆஜராக வேண்டும் என அதிகாரிகள் கண்டிப்பு காட்டியதால், மூதாட்டியை அவரது குடும்பத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ட்ரெச்சரில் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேற்று முன் தினம் அழைத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

 

முழு ஆவணங்களும் முறையாக இருக்கும் நிலையில் நில அபகரிப்பாளர்களுக்கு துணை வட்டாட்சியர் உடந்தையாக இருப்பதாகவும், பூர்வீக சொத்தை பட்டா மாறுதல் செய்வதற்கு ஏக்கருக்கு ஐந்து லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும் மூதாட்டியின் மகன் சண்முகசுந்தரம் குற்றஞ்சாட்டினார்.

 

இந்நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வருவாய்த்துறை அதிகாரிகளின் அலைக்கழிப்பால் தான் மூதாட்டி உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon