--- --:--:-- --

9 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!

1

பொள்ளாச்சி பாலியல் குற்றம்சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு அளித்த கோவை மகிளா நீதிமன்றம் தண்டனை விவரத்தை தற்போது அறிவித்துள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கியது.

 

பொள்ளாச்சி மாக்கினாம்பட்டி பகுதியைச் சேர்ந்த பண வசதி படைத்த இளைஞர் கும்பல் ஈடுபட்டதாகவும், பெண்களிடம் காதல் வலைவீசி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. அதிமுக ஆட்சியின்போது வெளிச்சத்துக்கு வந்த இந்த சம்பவத்தால், எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்ததால், இந்த வழக்கு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றது.

 

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், சபரி ராஜன், திருநாவுக்கரசு, வசந்தகுமார், சதீஷ், மணிவண்ணன் ஆகிய ஐந்து பேர் முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட நிலையில், வழக்கு சிபிஐ வசம் மாற்றப்பட்ட பின்னர், அதிமுக நிர்வாகியாக இருந்த அருளானந்தம், ஹெரோன் பால், பைக் பாபு உள்ளிட்ட நான்கு பேர் கைதாகினர். கைது செய்யப்பட்ட 9 பேரையும் காணொலி மூலம் ஆஜர்படுத்தி விசாரணை நடத்தப்பட்டது.

 

கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கோவை கூடுதல் மகளிர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. வழக்கின் தீர்ப்பை முன்னிட்டு குற்றவாளிகள் 9 பேரும் சேலம் மத்திய சிறையில் இருந்து பாதுகாப்பாக கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

 

முக்கிய வழக்கின் தீர்ப்பு என்பதால் நீதிமன்ற வளாகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நீதிமன்றத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய 9 பேரும் குற்றவாளிகள் என நீதிபதி நந்தினி தேவி அறிவித்தார்.இதை தொடர்ந்து தண்டனை விவரத்தை பிற்பகல் 12 மணிக்கு அறிவித்தார். அதன்படி குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை அறிவித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

குற்றம்சாட்டப்பட்ட 9 பேருக்கும் ரூ.40,000 வரை அபராதம் விதிக்கப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கில் பாதிக்க்பட்ட பெண்களுக்கு மொத்தமாக ரூ.85 லட்சம் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை நஷ்ட ஈடு வழங்கப்படும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon