பஹல்காமில் சுற்றுலா பயணிகளை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது ஏன்?
நாட்டையே உலுக்கிய காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவத்துக்கு தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (TRF) பொறுப்பேற்றுள்ளது. எப்போதும் போல காஷ்மீரின் அழகை ரசிக்க சென்ற சுற்றுலா பயணிகளுக்கு, நேற்றைய நாள் அப்படி அமையவில்லை. பஹல்காமில் குடும்பம் குடும்பமாக காஷ்மீரை ரசித்துக் கொண்டிருந்தவர்களை, திடீரென வந்த தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.
பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இந்த சம்பவம் இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த கொடூர தாக்குதலுக்கு, ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்’ (the Resistance Front) என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாதி ஹசீஃப் சையத்தின் லக்ஷர் இ தொய்பாவின் மற்றொரு பிரிவு இது.
இந்நிலையில், தாக்குதல் தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியா ஆக்கிரமிப்பு ஜம்மு காஷ்மீரில், உள்ளூர் காரர்கள் அல்லாத 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு குடியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், இதனால் அந்த பகுதியில் வெளி ஆட்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் சுற்றுலாப் பயணிகள் போல அந்த இடத்திற்கு வந்து வசிப்பதாகவும், பின்னர், நிலத்தை சொந்தமாக்குவதாகவும் தெரிவித்துள்ள அந்த அமைப்பு, அதன் விளைவாக சட்டவிரோதமாக அங்கு குடியேறுபவர்கள் மீது வன்முறை நடத்தப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. காஷ்மீரின் சுயாட்சி நீக்கப்பட்ட பிறகு 2019ம் ஆண்டு, TRF அமைப்பு உருவாக்கப்பட்டது.
ஆன்லைன் மூலமாக ஆட்கள் சேர்ப்பு, சட்டவிரோத நுழைவு, பாகிஸ்தானில் இருந்து காஷ்மீர் பகுதிக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்த இந்த அமைப்பின் செயல்பாடுகள் இந்திய இறையாண்மை மற்றும் பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாக கூறி கடந்த ஆண்டு இந்திய அரசு தடை செய்தது.
மேலும் அந்த அமைப்பின் கமாண்டரான ஷேக் சஜத் கல் என்பவர், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்படி தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.2020 ஏப்ரல் 1ம் தேதி இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கோடு பகுதியில், ராணுவத்தினர் மற்றும் இந்த அமைப்புக்கு இடையே துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் 4 பாரா கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்.
2024ம் ஆண்டு அக்டோபர் மாதம் கந்தர்பால் மாவட்டத்தில் கட்டுமான தளத்தில் நடந்த தாக்குதலில் ஒரு மருத்துவர் உட்பட 7 பேர் கொலை செய்யப்பட்டனர். அந்த தாக்குதலுக்கு கடைசியாக இந்த அமைப்பு பொறுப்பேற்றது.பொதுமக்கள், பாதுகாப்பு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மீது பல முறை தாக்குதல் நடத்தி உள்ளது. ஐஎஸ்ஐ அமைப்பின் ஆதரவுடன் இந்த அமைப்பு செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
2022ம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட தரவுகளின் படி, ஜம்மு காஷ்மீரில் கொல்லப்பட்ட 172 தீவிரவாதிகளில் 108 பேர் டிஆர்எஃப் அமைப்பை சேர்ந்தவர்கள். இந்த அமைப்பு தொடர்ந்து வளர்ந்து வந்த நிலையில், கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம், டிஆர்எஃப் கமாண்டரான கல்-ஐ பிடித்தது தருபவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனறு என்ஐஏ அறிவித்தது.இந்நிலையில், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, அதற்கு நியாயம் கூற நினைக்கும் இந்த அமைப்பை சேர்ந்தவர்களை பிடிக்கும் பணியில் இந்திய ராணுவம் ஈடுபட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




