செங்கல்பட்டில் திறக்கப்படும் புதிய பேருந்து நிலையம்..!
சென்னை புறநகர் மாவட்டமாக இருக்கக்கூடிய செங்கல்பட்டு, வளர்ச்சியை நோக்கி பயணிக்க தொடங்கி இருக்கிறது. புறநகர் பகுதி என்பதால், ஏராளமானவர்கள் செங்கல்பட்டில் இருந்து சென்னை நோக்கி வேலைக்காக, தினமும் சென்று வருகின்றனர்.
இதனால் செங்கல்பட்டு போக்குவரத்து நெரிசல் மற்றும் மக்கள் நெரிசலால் அவதி அடைந்து வருகின்றனர். செங்கல்பட்டு நகர் பகுதியில் கடந்த 1989 ஆம் ஆண்டு புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இது அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்றதாக இருந்தது.
ஆனால் இப்போது மக்கள் தொகை அதிகரித்து இருப்பதால் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்தில் நெரிசல் அதிக அளவு ஏற்பட்டு வருகிறது. செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையத்திலிருந்து காஞ்சிபுரம், மதுராந்தகம், தாம்பரம், திருப்பதி, திருக்கழுக்குன்றம், மாமல்லபுரம், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ.) செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே 9.95 ஏக்கர் நிலத்தில் 100 கோடியில் கட்டுமானப் பணிகளை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கியது. இந்த புதிய புறநகர் பேருந்து நிலையம் சுமார் 61 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு இடவசதியுடனும், 14 நடைமேடைகளுடனும் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
தரைத்தளம், முதல் தளம் மற்றும் இரண்டாம் தளத்துடன் கூடிய முனைய கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. 936 சதுர மீட்டர் பரப்பளவில் எரிபொருள் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், சி.எம்.டி.ஏ. அதிகாரிகள், மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கட்டுமான இடத்தை செவ்வாய்க்கிழமை பார்வையிட்டனர்.
அனைத்து பணிகளும் முடிவடைந்து வருகின்ற தீபாவளி பண்டிகைக்கு முன்பாக பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். இந்த பேருந்து நிலையம் செங்கல்பட்டில் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் என்று அவர் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




