இன்று முதலமைச்சர் தலைமையில் பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் கூட்டம்..!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக் கழக துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.
பல்கலைக் கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை நீக்குவது, பல்கலைக் கழகங்களுக்கு துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை தமிழ்நாடு அரசுக்கு வழங்குவது ஆகியவை தொடர்பான மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்திருந்தார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்ததுடன், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, நிலுவையில் இருந்த 10 மசோதாக்களை சட்டமாக மாறியதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு அண்மையில் வெளியிட்டது. அதில், மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட 2023-ஆம் ஆண்டிலேயே சட்டமானதாக அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் பதிவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், தமிழ்நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்துவதற்கான இந்த ஆலோசனை நடைபெற உள்ளதாகவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மேலும், முதல்முறையாக முதலமைச்சர் தலைமையில் துணைவேந்தர்களின் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




