வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!
வக்ஃப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றன. எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த நிலையில், சட்டமாக அமலுக்கு வந்தது.
இந்நிலையில், வக்ஃப் வாரிய திருத்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக, காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் மனுத் தாக்கல் செய்தன.
இதேபோல, இஸ்லாமிய அமைப்புகள், தனிநபர்கள் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.ஒட்டுமொத்தமாக 70-க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இவை அனைத்தும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது.
இதனிடையே, வக்ஃப் திருத்த சட்டத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், ஹரியானா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கர், அசாம் ஆகிய பாஜக ஆளும் 6 மாநில அரசுகள் சார்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
மேலும், தங்களது கருத்துக்களையும் கேட்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசு சார்பில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் நீதிபதிகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




