ஏப்ரல் 30ஆம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர்..!
ஏப்ரல் 30 ஆம் தேதி வரை சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மார்ச் 17ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை நடைபெறும்” என்று தெரிவித்தார். தொடர்ந்து, “மார்ச் 24 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறும்” என தெரிவித்தார்.
“காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பேரவை நிகழ்ச்சிகள் நடைபெறும்” என அவர் தெரிவித்தார்.அதிமுக கொண்டு வந்துள்ள நம்பிக்கை இல்லா தீர்மானம் குறித்து பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, “அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை, பேசுவதை தொலைகாட்சியில் காட்டவில்லை என நம்பிக்கையில்லா தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டுவரப்பட்டுள்ளது.
இதற்கு ஏற்கனவே பதில் அளித்து உள்ளோம்.யார் பேசுவதையும் காட்ட கூடாது என குறுகிய எண்ணத்துடன் இந்த அரசு செயல்படவில்லை. கடந்த முறை டெக்னிக்கல் பிரச்சனை என சட்டமன்றத்தில் பதில் அளித்து உள்ளேன். இனி அப்படி ஒன்றும் நடைபெறாது” என்றும் “நம்பிக்கை இல்லா தீர்மானம் தொடர்பாக திங்கட்கிழமை பேரவையில் எடுத்துக்கொள்ளப்படும்” என தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




