ஆளுநரின் குடியரசு தின விழா : தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்காது

குடியரசுத் தினத்தை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. குடியரசு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து அளிக்கப்படுகிறது.

 

இந்த ஆண்டு தேநீர் விருந்தில் தமிழ்நாடு அரசு பங்கேற்கவில்லை எனத் தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதியம் மதுரை மாவட்டம் அரிட்டாபட்டி செல்ல உள்ளார்.

 

அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கடந்த வியாழக்கிழமை ரத்து செய்து மத்திய அரசு உத்தரவிட்டது. டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக தீர்மானம் நிறைவேற்றி நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா நாளை அரிட்டாபட்டியில் நடைபெறுகிறது.

 

இந்த விழாவில் கலந்து கொள்ள நாளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரிட்டாபட்டி செல்லவுள்ளார். இதனால், ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் அவர் கலந்து கொள்ளப் போவதில்லை என கூறப்படுகிறது. அதேபோல் அரசு தரப்பில் அமைச்சர்கள் யாரும் தேநீர் விருந்தில் கலந்து கொள்ளப் போவதில்லை எனவும் தெரிகிறது.

 

ஏற்கெனவே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.