புறக்கணித்த எதிர்கட்சிகள்.. காரணம் சொன்ன அண்ணாமலை..!
அதிமுக, தேமுதிகவைத் தொடர்ந்து பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 14-ஆம் தேதி காலமானார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் 5-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து தேமுதிகவும் போட்டியிடவில்லை என தெரிவித்தது.
இதையடுத்து பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது. ‘தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்து ஆலோசித்தபிறகு இந்த முடிவு எடுத்திருப்பதாக’ தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை அகற்றி மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவது தங்களது இலக்கு என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.மேலும் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, பாஜக ஏன் இடைத்தேர்தலை புறக்கணித்தது என்பதை விளக்கினார்.
“நக்சல் தாக்குதல், தீவிரவாத தாக்குதல் இருக்கும்போது கூட வடமாநிலங்களில் தேர்தலை புறக்கணிக்காமல் போட்டியிட்டிருக்கிறது. ஆனால் தற்போது நடக்கும் இடைத்தேர்தலில் லஞ்ச லாவண்யத்துடன் தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆட்சி அடக்குமுறையுடன், பணம், கொலுசு, பரிசுப்பொருட்கள் இதையெல்லாம் வைத்து திமுக தேர்தலை சந்திக்கவுள்ளது.இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட்டுருந்தால் மக்களை திமுகவினர் பட்டியில் அடைத்து வைத்திருப்பார்கள்.
இப்படி திமுக தேர்தலை சந்திப்பதே கடைசி முறையாக இருக்கும். மக்களுக்கு தரமான ஹாட்பாக்ஸ் கொடுக்க வேண்டும். அதில் உதயநிதி படத்தை போடவேண்டாம். இந்த இடைத்தேர்தல் கானல் நீர் போன்றது தான்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சித்தார். அதிமுக, தேமுதிக, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் புறக்கணித்துள்ளதால், திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிகள் இடையிலான இருமுனைப் போட்டியாக ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் களம் மாறியுள்ளது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் எதிர்க்கட்சிகள் குறித்து அமைச்சர் துரைமுருகன் விமர்சித்துள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் நிலையில், எதிர்க்கட்சிகள் யாரும் போட்டியிட முன்வரவில்லையே என்ற கேள்விக்கு, “எதிர்க்கட்சிகள் அவ்வளவு பலமாக இருக்கிறார்கள்” என அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தொடர்ந்து வேலூரில் அரசு பொருட்காட்சியை திறந்துவைத்தப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “முதலமைச்சருக்கு ஆணவம் என ஆளுநர் கூறுகிறார். ஆனால் அவருக்கு ஆளுநர் என்கிற திமிர்” என ஆளுநரின் விமர்சனத்துக்கு அமைச்சர் துரைமுருகன் எதிர்வினையாற்றியுள்ளார்.மேலும் சட்டப்பேரவையில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது மரபு. அந்த மரபைத்தான் ஆளுநர் மாற்றுமாறு கூறியதாக துரைமுருகன் குற்றஞ்சாட்டினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




