12 ஆண்டுகளுக்கு பின் இன்று தொடங்கும் மகா கும்பமேளா..!
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சி கோலாகலமாக இன்று தொடங்குகிறது. உலகின் மிகப்பெரிய ஆன்மிக நிகழ்ச்சிகளில் ஒன்றாக கருதப்படுவது மகா கும்பமேளா.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்க உலகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் பிரயாக்ராஜ் நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
குறிப்பாக, சாதுக்களும், துறவிகளும், அகோரிகளும் வண்ணப்பொடிகளைத் தூவிக் கொண்டு, கழுத்தில் மண்டை ஓடு மாலையுடன் மந்திரங்கள் முழங்க தெருக்களில் உலா வந்தனர்.ஹரித்வாரில் உள்ள ஸ்ரீ பஞ்சாயத்தி அகாரா படா மடத்தை சேர்ந்த ரிஷிகள் மற்றும் மகான்கள் ஆட்டம் பாட்டத்துடன் ஒட்டகம் மற்றும் குதிரையில் மகா கும்பமேளா நடைபெறும் இடத்திற்கு சென்றனர்.
இந்நிலையில், ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பாவெல், மகா கும்பமேளாவில் பங்கேற்க இந்தியா வந்துள்ளார். வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்ற லாரன் பாவெல் சாமி தரிசனம் மேற்கொண்டார்.
இன்று கோலாகலமாக தொடங்கும் கும்பமேளா நிகழ்ச்சியிலும் லாரன் பாவெல் பங்கேற்கிறார்.இந்நிலையில், கும்பமேளாவில் கலந்துகொள்ள செல்லும் பக்தர்களுக்காக தற்காலிக குடில்களை அம்மாநில அரசு அமைத்துள்ளது. மேலும் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு தனி சிற்றுண்டி, பக்தர்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் மருத்துவ உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.கங்கை, யமுனை மற்றும் கண்களுக்குப் புலப்படாத சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில், புனித நீராடுதல் மற்றும் தானம் செய்வது இந்நிகழ்ச்சியில் புகழ்பெற்றதாகும்.
மேலும் மகாகும்பத்தின் போது ராஜ ஸ்நானம் செய்வதன் மூலம், புண்ணியம் கிடைப்பதுடன், மோட்சம் கிட்டும் என்ற நம்பிக்கையும் பக்தர்களிடம் நிலவுகிறது.இன்று தொடங்கும் மகா கும்பமேளா, பிப்ரவரி 26 ஆம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள நிலையில், உத்தரப்பிரதேச மாநிலமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




