ஆளுங்கட்சிகள் அமோகம்..மகாராஷ்டிராவில் தட்டித் தூக்கிய பாஜக..ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அபாரம்..கைகொடுத்த திராவிட மாடல் திட்டங்கள்!!

காராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலையில், இதுவரை இல்லாத சாதனை வெற்றியை அக்கட்சி பெற்றுள்ளது. பாஜகவின் வியூகங்களை தவிடுபொடியாக்கி ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளார். இரு மாநிலங்களில் ஆளுங்கட்சிகள் மீண்டும் அரியணை ஏற திராவிட மாடல் அரசின் திட்டங்கள் கைகொடுத்துள்ளன.

 

மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவையில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ. 20ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. ஆளும் பாஜக, சிவசேனா (ஷிண்டே அணி), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) அடங்கிய மகாயுதி கூட்டணியும், காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணியும் நேரடி களமிறங்கின.

 

மகாயுதி கூட்டணியில் பாஜக 149, ஷிண்டே அணி 81, அஜித் பவார் அணி 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடி கூட்டணியில் காங் கிரஸ் 101, உத்தவ் தாக்கரே அணி 95, சரத் பவார் அணி 86 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தின.

 

மகாராஷ்டிராவில் பாஜக அமோகம்!

 

தேர்தல் முடிந்து வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், பாஜக 132 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் ஷிண்டே அணி 57 தொகுதிகளிலும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது.

 

முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, கோப்ரி-பச்பகாடி தொகுதியில் வெற்றி பெற்றார். துணை முதல்வர்களான தேவேந்திர பட்னாவிஸ் நாக்பூர் தெற்கு மேற்கு தொகுதியிலும், அஜித் பவார், பாராமதி தொகுதியிலும் வெற்றி பெற்றனர்.

 

மகாராஷ்டிராவில் தற்போது பாஜக கூட்டணியில் சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே முதல்வராகவும், பாஜக மூத்த தலைவர் தேவேந்திர பட்னாவிஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் துணை முதல் வர்களாகவும் உள்ளனர். தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில் புதிய முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

புதிய முதல்வர் யார் என்பதை பாஜக, சிவசேனாவின் ஷிண்டே அணி, தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் அணி ஆகிய 3 கட்சிகளும் இணைந்து முடிவு செய்து அறிவிக்க உள்ளன. தேவேந்திர பட்னாவிஸ் புதிய முதல்வராக வாய்ப்புகள் அதிகம் என்று கூறப்படுகிறது.

 

மரண அடி – காங்கிரஸ் அதிர்ச்சி!

 

மகாராஷ்டிராவில் மகா விகாஸ் அகாடி கூட்டணி பலத்த அடியை சந்தித்துள்ளது. அந்த அணியில், 101 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 16 இடங்களை மட்டுமே கைப்பற்றி தனது மோசமான தோல்வியை பதிவு செய்துள்ளது.

 

அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணிக்கு 20, தேசியவாத காங்கிரஸின் சரத் பவார் அணிக்கு 10, சமாஜ்வாதிக்கு 2 தொகுதிகள், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஒரு தொகுதி கிடைத்தன. எதிர்க்கட்சி வரிசையில் அமர தேவையான இடங்களை எந்த கட்சியும் பெறாத நிலை உருவாகி இருக்கிறது.

 

மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான பிரித்விராஜ் சவுகான் கூறுகையில், “மகாராஷ்டிரா தேர்தலில் காங்கிரஸ் பெற்ற தோல்வி மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான தோல்வி இது. பெண்களுக்கு நிதியுதவி அளிக்கும் மகாயுதி அரசின் லட்கி பஹின் யோஜனா திட்டம் கிராமப்புற வாக்காளர்களைக் கவர்ந்துள்ளது” என்றார்.

 

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) தலைமையிலான இண்டியா கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் தலைவர் ஹேமந்த் சோரன் மீண்டும் முதல்வராகிறார்.

 

மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் கடந்த 13, 20-ம் தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இண்டியா கூட்டணியில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) 43, காங்கிரஸ் 30, ராஷ்டிரிய ஜனதா தளம் 7, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 4 தொகுதிகளில் போட்டியிட்டன.

 

ஆளுங்கட்சிக்கு அசத்தல் வெற்றி!

 

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு 10, ஐக்கிய ஜனதா தளம் 2, லோக் ஜன சக்தி 1 தொகுதிகளில் போட்டியிட்டன. வாக்கு எண்ணிக்கையில், இண்டியா கூட்டணியில் உள்ள ஜேஎம்எம் 34, காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) 4, இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்-எல்) 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. ஒட்டுமொத்தமாக இண்டியா கூட்டணி 56 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21, ஜார்க்கண்ட் மாணவர் கூட்டமைப்பு 1, லோக் ஜன சக்தி 1, ஐக்கிய ஜனதா தளம் 1 தொகுதியில் வெற்றி பெற்றன. அந்த கூட்டணிக்கு 24 தொகுதிகள் கிடைத்துள்ளன. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் 25 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாஜகவுக்கு தற்போது 21 இடங்கள் மட்டுமே கிடைத்திருப்பது அக்கட்சிக்கு கவலையை ஏற்படுத்தி இருக்கிறது.

 

 

வெற்றிக்கு வழிவகுத்த மகளிர் உரிமை திட்டம்!

 

தமிழகத்தில் திமுக அரசு மகளிர் உரிமைத் தொகையாக தகுதி வாய்ந்த மகளிருக்கு மாதம் ரூ.1,000 வழங்கி வருகிறது. மகாராஷ்டிரா தேர்தல் வாக்குறுதியில் பாஜகவும், ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரனும் இந்த உத்தியை கையில் எடுத்து மகளிர் வாக்குகளை பெருவாரியாக கவர்ந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

 

மகளிருக்கு நேரடி நிதி உதவி வழங்கும் திட்டங்கள் மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தேர்தல் வாக்குறுதிகளாக அளிக்கப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட “லடுக்கி பகின் யோஜனா” என அழைக்கப்படும் முதலமைச்சரின் மகளிர் உதவி திட்டம் மூலம் மாதம் 1,500 ரூபாய் மகளிருக்கு வழங்கப்பட்டு வருகிறது.

 

அதேபோல ஜார்க்கண்ட் மாநிலத்தில் மகளிர் உதவித் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய் மகளிருக்கு நேரடி நிதி உதவியாக வழங்கப்படுகிறது. இது ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்று ஜேஎம்எம் உறுதி அளித்தது. இரு மாநிலங்களிலும் ஆளுங்கட்சிகள் தங்களது அதிகாரத்தை தக்கவைக்க, இந்த வாக்குறுதிகள் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்றால் மிகையல்ல.

 

பாஜக சறுக்கியது எங்கே?

 

அதேபோல், ஜார்க்கண்டில் பாஜகவுக்கு வலுவான, மக்கள் மத்தியில் பிரபலமான தலைவர்கள் இல்லை என்று கூறப்படுகிறது. முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா 100-க்கும் மேற்பட்ட பொதுக்கூட்டங்களில் பிரச்சாரம் செய்தார். ஆனால், அவருக்கு இணையாக பாஜகவில் பெண் தலைவர் இல்லை. அதுமட்டுமின்றி, ஊழல் வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டது அனுதாப அலையை ஏற்படுத்தியது. இதெல்லாம் ஜார்க்கண்டில் பாஜகவின் வியூகங்களை வீழ்த்திவிட்டன.

 

 

எப்படியோ, ஆளுங்கட்சிகள் தங்களது ஆட்சியை தக்க வைக்க தமிழகத்தின் திட்டங்கள் முன்மாதிரியாக இருந்து உதவி உள்ளன என்பதே உண்மை.

 

இடைத்தேர்தலில் பாஜக ஆதிக்கம்!

 

நாடு முழு​வதும் 14 மாநிலங்​களில் உள்ள 48 சட்டப்​பேரவை தொகு​தி​கள், கேரளாவின் வாயநாடு மற்றும் மகாராஷ்டிரா​வின் நாந்​தேடு மக்களவை தொகு​தி​களி​ல் இடைத் தேர்தல் நடைபெற்​றது. உத்தர பிரதேசத்​தில் 9, ராஜஸ்​தானில் 7, மேற்கு வங்கத்​தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சா​பில் தலா 4, கர்நாட​கா​வில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்​கிமில் தலா 2 தொகு​திகள் குஜராத், உத்த​ராகண்ட், மேகாலயா, சத்தீஸ்​கரில் தலா ஒரு சட்டப் பேரவை தொகு​தி​களில் இடைத் தேர்தல் நடைபெற்றது.

 

வயநாடு தொகு​தி​யில் காங்​கிரஸ் சார்​பில் போட்​டி​யிட்ட பிரி​யங்கா காந்தி வெற்றி பெற்​றார். மகாராஷ்டிரா​வின் நாந்​தேடு தொகு​தி​யில் பாஜக சார்​பில் போட்​டி​யிட்ட டாக்டர் ஹம்பார்டே வெற்றி பெற்​றார்.

 

உத்தர பிரதேசத்​தின் 9 சட்டப்​பேரவை தொகு​தி​களில் பாஜக 6, சமாஜ்வாதி 2, ராஷ்ட்ரிய லோக்​தளம் 1 தொகு​தி​களில் வென்றன. ராஜஸ்​தானின் 7 தொகு​தி​களில் பாஜக 5, காங்​கிரஸ் 1, பாரத் ஆதிவாசி கட்சி 1 இடங்​களில் வென்றன. பீகாரில் 4 தொகு​தி​களில் பாஜக 2, ஐக்கிய ஜனதா தளம், இந்துஸ்​தான் அவாமி மோர்ச்சா தலா 1 இடத்​தி​லும் வென்றன.

 

மேற்​கு​ வங்​கத்​தின் 6 தொகு​தி​களில் திரிண​மூல் காங்​கிரஸ் வென்​றது. அசாமின் 5 தொகு​தி​களில் பாஜக 3, அசாம் கன பரிஷத் மற்றும் ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை தலா ஒரு இடத்​தி​லும் வென்றன. பஞ்சா​பில் ஆம் ஆத்மி 3, காங்​கிரஸ் 1 இடங்​களில் வென்றன. கர்நாட​கா​வில் 3 இடங்​களி​லும் காங்​கிரஸ் வென்​றது. கேரளா​வில் காங்​கிரஸ் மற்றும் மார்க்​சிஸ்ட் கட்சி தலா 1 இடத்​தில் வென்றன.

 

மத்தியப் பிரதேசத்​தில் பாஜக, காங்​கிரஸ் தலா 1 இடத்​தில் வென்றன. சிக்​கிம் மாநிலத்​தில் உள்ள 2 தொகு​தி​களில் சிக்​கிம் கிராந்​தி​காரி மோர்ச்சா கட்சி வென்​றது. குஜராத்​தில் பாஜக 1, உத்த​ராகண்ட்​டில் பாஜக 1, மேகால​யா​வில் தேசிய மக்கள் கட்சி 1 இடத்​தி​லும், சத்தீஸ்​கரில் பாஜக 1 இடத்​தி​லும் வென்றன.

 

ஒட்டுமொத்தமாக இடைத் தேர்​தல் நடை​பெற்ற 48 சட்​டப்​பேரவை தொகு​தி​களில் பாஜக 20 இடங்களை தன்வசமாக்கி உள்ளது.

 

வயநாட்டை வசப்படுத்திய பிரியங்கா!

கடந்த மக்களவை தேர்தலில் வயநாடு, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதிகளிலும் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டார். இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற ராகுல், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அங்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தியை வேட்பாளராக முதல் முறையாக களம் இறக்கியது காங்கிரஸ் கட்சி.

 

வயநாடு முழுதும் சுற்றிச் சுழன்று, பிரியங்கா பிரசாரம் செய்தார். ராகுலும், பிரியங்காவுக்காக வரிந்து கட்டிக் கொண்டு இறங்கினார். இதன் பலனாக, பிரியங்கா 6,22,338 வாக்குகள் பெற்று வயநாட்டை வசப்படுத்தி இருக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் முக்கேரியை விட 4,10,932 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றார். பாரதிய ஜனதா கட்சியின் நவ்யா ஹரிதாஸ் 1,09,939 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார். பிரியங்காவின் முதல் அரசியல் களமே அமர்க்களமாக ஆரம்பமாகி உள்ளது.