--- --:--:-- --

தமிழ்தாய் வாழ்த்து பாடலில் விடுபட்ட ‘திராவிட நல் திருநாடு’

1

தமிழ்நாட்டில் திமுக 1967ல் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததும், அன்றைய முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் வகையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாட வேண்டும் என முடிவு செய்தார். இதற்காக அப்போது மனோன்மணீய சுந்தரனார் எழுதிய நீராருங் கடலுடுத்த பாடலும், கரந்தை கவியரசு இயற்றிய வானார்ந்த பொதியின்மிசை வளர்கின்ற மதியே பாடலும் பரிந்துரைக்கப்பட்டது.

 

இதில், மனோன்மணீயட சுந்தரனார் எழுதிய நீராரும் கடலுடத்த பாடலில் வரும் ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும்’ எனும் வரிகளுக்காக அதுவே தமிழ்நாட்டிற்கு சிறந்ததாக இருக்கும் என அந்தப் பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாய் பேரறிஞர் அண்ணா தேர்வு செய்தார். ஆனால், 1969ம் அவர் உடல் நலக் குறைவால் மரணம் அடைய அதன்பிறகு முதலமைச்சராக கலைஞர் கருணாநிதி பொறுப்பேற்றார்.

 

அதன்பிறகு, 1970-ம் ஆண்டு தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ஆணை பிறப்பித்தார். அதன்படி அரசு விழாக்கள், கல்வி நிலையங்களின் விழாக்கள் ஆகியவற்றின் தொடக்கத்தில் பாடப்படும் இறை வணக்கத்துக்குப் பதிலாக, மனோன்மணீயம் காப்பியத்தில் பெ.சுந்தரனார் எழுதிய “நீராருங் கடலுடுத்த” எனத் தொடங்கும் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படவேண்டும் எனக் கூறப்பட்டது. அதன்படியே, இன்றுவரையிலும் ‘நீராருங் கடலுடுத்த’ பாடல் அரசு விழாக்களிலும், கல்வி நிலைய விழாக்களிலும் பாடப்பட்டு வருகின்றது.

 

தமிழ் மொழியை வாழ்த்தும் இப்பாடலில், ‘ஆரிய போல் உலக வழக்கழிந் தொழிந்து’ என்று வரும் வரியை, வாழ்த்துப் பாடலில் ஒப்புமையும் வேண்டாம் பிறிதொரு மொழி அழிந்ததை குறிக்கவும் வேண்டாம் என சில வரிகளை நீக்கி அந்தப் பாடலை ‘தமிழ்த்தாய் வாழ்த்தாக’ பாடச் செய்தார் செய்தார் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.இன்று சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து இந்தி மாதம்’ நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது.

 

இதில், இந்தி மாதம் நிறைவை கொண்டாடுவதற்கு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். அதேசமயம், சென்னையில் உள்ள சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் பொன்விழா கொண்டாடப்பட்டது. இதில், ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்றிருந்தார். விழாவின் துவக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

 

அப்போது பாடலை பாடியவர்கள், நீராரும் என பாடலை ஆரம்பித்து பாடியபோது, ‘தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்’ எனும் வரியை தவிர்த்துவிட்டு பாடினார்கள். அதிலும், அந்த வரி வரும் போது அதனை தவிர்ப்பதா அல்லது அடுத்த வரியை எப்படி பாடுவது என்ற குழப்பமும் ஏற்பட்டது.தமிழ்நாட்டில் நடந்த சென்னை தொலைக்காட்சி பொன்விழா மற்றும் இந்தி மாதம் நிறைவு விழாவில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிட நல்திருநாடு’ தவிர்க்கப்பட்டிருப்பது தற்போது பெரும் சர்ச்சையாக மாறியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon