திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் நீர் திறப்பு..!
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆணைக்கினங்க, திருப்பூர் மாவட்டம் திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தில் பாலாறு படுகை இரண்டாம் மண்டலப் பாசனப் பகுதிகளுக்குட்பட்ட 94,201 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் டிசம்பர் 16ம் தேதி வரை 120 நாட்களுக்கு உரிய இடைவெளிவட்டு நான்கு சுற்றுகளாக மொத்தம் 8000 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தில் உள்ள பாலாறு பழைய ஆயக்கட்டு பாசனமான தளி வாய்க்கால் 2786 ஏக்கர் பாசனப் பகுதிகளுக்கு திருமூர்த்தி அணையிலிருந்து ஆகஸ்ட் 18ம் தேதி முதல் 2025ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதி வரை நீரிழப்பு உட்பட மொத்தம் 700 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தேவைக்கேற்ப தண்ணீர் திறந்து விட அரசாணை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம், திருமூர்த்தி அணையிலிருந்து பரம்பிக்குளம் பிரதான கால்வாயில் 250 கன அடி அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக உயர்த்தப்பட்டு கால்வாயின் முழு கொள்ளளவான 912 கன அடி அளவிற்கு படிப்படியாக அதிகரித்து வழங்கப்படும். மேலும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தளி வாய்க்காலில் 20 கன அடி அளவில் தண்ணீர் திறக்கப்படுகிறது.
இதனால், திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம் மற்றும் காங்கயம் ஆகிய வட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் சூலூர் ஆகிய வட்டங்களில் மொத்தமாக 94,201 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும்.
விவசாய பெருமக்கள் தண்ணீரை சிக்கனமாக உபயோகித்தும் இத்துறைக்கு நீர்பங்கீட்டுப்பணிகளில் ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், நீர்வளத்துறை தலைமை பொறியாளர் (கோவை மண்டலம்) எஸ்.முருகேசன் , திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், உடுமலைப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வந்த் கண்ணன், நீர்வளத்துறை சுப்பிரமணியன், எஸ்.ஏ.சத்திகுமார், உதவி செயற்பொறியாளர்கள், செயற்பொறியாளர்கள், உதவிப்பொறியாளர்கள், எ.மகேந்திரன், ஆதிசிவன், கே.மாரிமுத்து, என்.ஜெயக்குமார், எஸ்.முத்துக்குமார், சண்முகம், உடுமலைப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவர் மகாலட்சுமி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




