ஜெ. தீவிர இந்துத்துவா தலைவர் தான்.. அதிமுக விவாதிக்க வரலாம் – அண்ணாமலை
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவா தலைவர் என்று மீண்டும் தெரிவித்துள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, இதுகுறித்து அதிமுக தலைவர்கள் விவாதிக்க வரலாம் என அழைப்பு விடுத்துள்ளார் .
சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மண்டபத்தில் பாஜக மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, வாக்கு எண்ணிக்கையின் போது கட்சியினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தேர்தல் பணிகளை குறிப்பிட்டு பேசிய போது, தேர்தலில் பணியாற்றாத நிர்வாகிகள் குறித்த விவரங்கள் அனைத்தும் தனக்கு தெரியும் என்றும், தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சியில் நிச்சயம் களையெடுப்பு இருக்கும் என்றும், மேலே இருப்பவர்கள் கீழே வரலாம், கீழே இருப்பவர்கள் மேலே போகலாம் எனத் தெரிவித்தார்.
பாஜகவிற்கு தெற்கில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் இம்முறை இரட்டை இலக்கில் வெற்றி நிச்சயம் என்று கூறிய அவர், எத்தனை இடங்களி என்பதை விட எவ்வளவு வாக்கு சதவீதம் என்பதே முக்கியம் என்றார்.தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி இரட்டை இலக்கில் வெற்றிபெறும் எனக் கூறினார்.
தொடர்ந்து ஜெயலலிதா கடந்த காலங்களில் ராமர் கோயில் கட்ட கையெழுத்து இயக்கம் நடத்தியது, காஷ்மீரில் 370-ஐ பிரிவை நீக்க வேண்டும், பொது சிவில் சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் கூறியது உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி, அவரை இந்துத்துவாவாதி என சொல்வதில் என்ன தவறு என்று அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
மேலும், தனது கருத்தை அதிமுகவினர் எதிர்த்தால் விவாதத்துக்கு பாஜக தயாராக இருப்பதாகவும், எஸ்டிபிஐ கட்சியுடனான கூட்டணிக்காக மாற்றி பேச வேண்டிய அவசியம் அதிமுகவுக்கு எழுந்துள்ளதாகவும் அண்ணாமலை விமர்சனம் செய்தார்.தொடர்ந்து பேசிய அவர், திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் கருத்துரிமையை பேசுவது தான் வேடிக்கையாக இருப்பதாக கூறினார்.
பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்ததே அரசியல் அனுபவமாக கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ், பிரதமர் மோடி குறித்து பேசுவதை தாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை எனவும் தெரிவித்தார். சீமான் விஜயலட்சுமிக்கு சொல்ல வேண்டிய பதிலை முதலில் சொல்லிவிட்டு தன்னை குறித்து பேசட்டும் எனவும் கிண்டலாக தனது விமர்சனத்தை அண்ணாமலை முன்வைத்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




