மயிலாடுதுறையில் மல்லுக்கட்டு …கோதாவில் இல்லாத சுதா வந்த பின்னணி!
பிரிக்க முடியாதது எதுவோ…? என்று கேட்டால், காங்கிரஸும் கோஷ்டிப் பூசலும் என்று சொல்லலாம். அதிகாரத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கோஷ்டி பூசல்கள் காங்கிரஸில் இருந்து கொண்டே இதான் இருக்கின்றன.
மக்களவைத் தேர்தல் வேட்பாளர்கள் 10 பேரைக் கூட தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் திணறிப் போனதற்கு கோஷ்டிப்பூசல் தான் காரணம். மயிலாடுதுறை காங்கிரஸ் வேட்பாளர் அறிவிப்பு இழுபறியானதற்கு, போட்டியிட முட்டி மோதிய பிரவீன் சக்கரவர்த்தி, மணி ஷங்கர் ஐயர், செல்லக்குமார், எம்.பி திருநாவுக்கரசர் என ஒரு பட்டாளமே இருந்ததுதான் காரணம் என்கிறார்கள்.
ஆனால், இந்த லிஸ்டிலேயே இல்லாத சுதா என்பவர், மயிலாடுதுறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். திருவள்ளுவர் மாவட்ட கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பவரின் மகள் சுதா ராமகிருஷ்ணன். வழக்கறிஞரான இவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தியுடன் வழக்கறிஞர் சுதா ராமகிருஷ்ணன் நடந்து சென்றுள்ளார். கடலூர் தொகுதியில் போட்டியிடவே விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இறுதிகட்டத்தில் அவர் மயிலாடுதுறை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
மயிலாடுதுறைக்கு சீனியர் கதர்ச்சட்டைகள் மல்லுக்கு நிற்க, சிக்கலைத் தவிர்க்க ஒரு ஐடியாவை பரிசீலித்தது காங்கிரஸ். மயிலாடுதுறையில் ஒருவருக்கு தொகுதி ஒதுக்கினால் மற்ற தலைவர்களுக்கு அதிருப்தி நிலவும் என்பதால், தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத புதுமுகத்தை இறக்குவோம் என்று நினைத்து, சுதாவை அறிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை. இனி, சுதா தலைமையில் ஒரு கோஷ்டி காங்கிரஸில் உருவாகும் என்பது கியாரண்டி.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




