நோ பார்க்கிங் போர்டு வைக்காமல் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் போலீசார்..!
நீலகிரி மாவட்டம் மசினகுடியில் நோ பார்க்கிங் போர்டு வைக்கப்படாமல் வாகனங்களுக்கு நோ பார்க்கிங் பைன் போடப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செல்லும் இடமானது மசனகுடி. வார இறுதி நாட்களிலும் மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் மசனகுடி வருவது வழக்கம்.
இது போன்ற நாட்களில் மசினகுடி ஊட்டி ரோட்டில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொதுவாக அனைத்து நாட்களிலும் மசினகுடி ஊட்டி ரோட்டில், சாலையின் இடது புறத்தில் வாகனங்கள் நிறுத்துவது வழக்கம். அப்பகுதியில் இதுவரை நோ பார்க்கிங் போர்ட் எந்த இடத்திலும் வைக்கப்படுவதில்லை.
அப்பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களில் வெளிமாவட்டம் மற்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட வாகனங்களுக்கு மட்டும் மசனகுடி போக்குவரத்து போலீசார் நோ பார்க்கிங் பைன் போட்டு வருகின்றனர். அதேபோல் வாகன உரிமையாளருக்கு செலான் ஏதும் வழங்கப்படுவதும் இல்லை.
ஆர்டிஓ அலுவலகத்தில் சரியான மொபைல் எண் பதிவு செய்த வாகன உரிமையாளருக்கு மட்டும் குறுஞ்செய்தி மூலம் செலான் போடப்பட்டிருப்பது தெரிய வருகிறது. இது குறித்து போக்குவரத்து போலீசாரிடம் கேட்டபோது நோ பார்க்கிங் போர்ட் வைப்பதற்கு போலீசாருக்கு பண்ட் இல்லை எனவும், இதனை பெருசுபடுத்த வேண்டாம் எனவும் கூறுகின்றனர்.
தவறே செய்யாத வாகன ஓட்டிகள் பைன் கட்டும் நிலைமைக்கு தள்ளப்படுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாக உள்ளது. இந்தப் புகார் மீது நீலகிரி மாவட்ட எஸ் பி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





