--- --:--:-- --

தல போல வருமா..? நூதன முறையில் ஹெல்மெட் விழிப்புணர்வு பிரசாரம்.. அடடே போட வைக்கும் திருப்பூர் போக்குவரத்து போலீசார்!

reafesw

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். தல போல வருமா என்ற ஆடியோ வெளியிட்டு நூதன முறையில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

 

லக நாடுகளில் உள்ள வாகனங்களின் மொத்த எண்ணிக்கையில் 2 சதவீதமே இந்தியாவில் உள்ளது. இருப்பினும் வாகன விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் குறிப்பாக, தமிழகத்தில் அதிகளவில் சாலை விபத்து நடக்கிறது.

 

கடந்த 2021ம் ஆண்டில், சாலை விபத்துகள் அதிகம் பதிவான மாநிலங்களில் 55,682 விபத்து சம்பவங்களுடன் முதலாவது இடத்தில் உள்ளது தமிழ்நாடு. இருசக்கர வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டதிலும் தமிழ்நாடு (8,259) முதலிடத்தில் உள்ளது. சாலை விபத்துகளில் விதிமீறும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் பங்கு மிக அதிகளவில் உள்ளது. ஹெல்மெட் அணியாததே பெரும்பாலும் விபத்தில் உயிரிழப்பு நேரிட காரணமாகிறது.

 

இந்த நிலையில், திருப்பூர் போக்குவரத்து போலீசார் இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நூதன முறையில் விழிப்புணர்வு பிரசாரத்தை மேற்கொண்டனர். ஆகஸ்ட் 1ம் தேதி மாலை திருப்பூர் புஷ்பா ஜங்ஷன், தேவாங்கபுரம் அரசு பள்ளி முன்பு, திருப்பூர் மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர், சார்- ஆட்சியர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்,TNSTC அரசு போக்குவரத்து கோட்ட மேலாளர், தனியார் போக்குவரத்து தலைவர்கள் மற்றும் பள்ளி மாணவ மாணவிகள் கலந்துகொண்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்த நிகழ்ச்சியில், ஹெல்மெட் அணியாத தந்தையை பார்த்து அவரது குழந்தைகள் ஹெல்மெட் போட வலியுறுத்தும் வகையில் அமைந்த ஆடியோ வெளியிடப்பட்டது. அதில் குழந்தைகள் தந்தையை பார்த்து, “உடலில் எங்கு அடிபட்டாலும் உயிர் பிழைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால், தலையில் அடிபட்டால் உயிர் பிழைக்க வாய்ப்பு மிகவும் அரிது. சாலை விபத்துகளில் அதிக உயிர்ப்பலிக்கு காரணம், இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தலையில் ஹெல்மெட் போடாததுதான் முக்கிய காரணம்.

நம்ம குடும்பத்திற்கு அப்பா நீங்க ரொம்ப முக்கியம்… உங்களுக்கு தலை முக்கியம்… அந்த தலையின் பாதுகாப்புக்கு ஹெல்மெட் ரொம்பவே முக்கியம். தலைக்கவசம் போடுங்க… அது உயிர்க்காக்கும் கூடுங்க! டூவிலர் ஓட்டுபவர்களின் உயிர் மட்டும் முக்கியமல்ல; அதில் பின்னால் அமர்ந்து வருபவரின் உயிரும் தானே முக்கியம். எனவே, டூ வீலரில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிவது அவசியம். உங்களின் பிரியமானவர்களுக்கு நல்ல பரிசளிக்க விரும்பினால், ஹெல்மெட் பரிசளிக்கலாம். உரிமம் வாங்குவதற்கு 8 போடுங்க; உயிரைக்காக்க ஹெல்மெட் போடுங்க. எட்டு போட 2 சுழி; வண்டியில் பயணிக்கும் 2 உயிர்களை காக்க, ஹெல்மெட் போடுவதே வழி” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

 

இந்த ஆடியோவை அங்கிருந்தவர்கள் வெகுவாக ரசித்து பாராட்டி தங்களது சமூக வலைதளங்களில் பலருக்கும் பகிர்ந்தனர். போலீசாரின் இந்த நூதன முறையிலான விழிப்புணர்வு பிரசாரத்தை பலரும் வரவேற்று பாராட்டினார்கள்.

 

இந்த நிகழ்விற்கு பிறகு பேசிய காவல் ஆணையர், “திருப்பூர் மாவட்டத்தில் இந்தாண்டு மட்டும் இரு சக்கர வாகன விபத்தில் இதுவரை 100 பேர் வரை உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்புகள் அனைத்திற்கும் காரணம், தலையில் பலத்த காயம் ஏற்பட்டதுதான். இவர்கள் தலைக்கவசம் அணிந்து பயணம் செய்திருந்தால், தங்கள் குடும்பத்தினரோடு தற்போது இருந்திருப்பார்கள். எனவே, ஹெல்மெட் போடாமல் டூவீலர் எடுக்கக் கூடாது.

 

இதை வலியுறுத்தும் வகையில், No helmet, No key என்ற பொருளில் கடந்த 3 மாதங்களாக நாங்கள் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வருகிறோம். இந்த விழிப்புணர்வின் பயனாக இம்முறை டூவிலர் விபத்துகளில் மரணம் 20 சதவிகிதம் குறைந்துள்ளது. கடந்தாண்டு பலியானவர்களில் 22 பேர் இரு சக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்து சென்றவர்கள்.

 

சாலையில் 10- ஒரு இருசக்கர வாகனத்தில் தான் இருவர் பயணிக்கின்றனர். ஆனால் உயிரிழப்பை பார்க்கும் போது 4-ல் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பவர் பலியாகிறார். இதற்கு காரணம், வாகனத்தை ஓட்டுபவர் ஹெல்மெட் அணிந்தாலும் பின்னால் அமர்ந்திருப்பவர் ஹெல்மெட் அணியாததுதான். எனவே, இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். இதை வலியுறுத்தியே இந்த விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றுள்ளது. மேலும் இருசக்கரத்தில் பயணிக்கும் இருவருமே ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி ஆடியோ பிரசாரம், விழிப்புணர்வு ஸ்டிக்கர் வெளியிட்டுள்ளோம்” என்றார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon